|
"வல்லமை தாராயோ" -விமர்சனம்

காதலன் ஒருபுறம்... கணவன்
ஒருபுறம்... இருவருக்கும் நடுவில் தவியாய்
தவிக்கும் பெண்ணின் வித்தியாசமான கதைதான் வல்லமை
தாராயோ. பெண் இயக்குனர் என்பதாலோ என்னவோ
பெண்ணின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர்
மதுமிதா.
ஸ்ரீகாந்தை உயிருக்கு உயிராக
காதலிக்கிறார் சாயாசிங். காதல் என்றால் வில்லன்
ஒருவர் இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின்
கட்டாய விதி என்பதால் இங்கேயும் ஒரு வில்லன்
வருகிறார் சாயாசிங்கின் அப்பாவான ஆனந்தராஜ்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்
பார்த்திபனுக்கு சாயாசிங்கை கட்டாய திருமணம்
செய்து வைக்கிறார். மனசு நிறைய காதலனின் நினைவுகளை
சுமந்துகொண்டு, கட்டாய கணவனுடன் சென்னை
வருகிறார். பேச்சுலராக வாழ்ந்து வந்த பார்த்திபன்
புதுமனைவியுன் சென்னையில் ஜாலியாக இருக்க
வேண்டும் என்ற கனவுகளுடன் தனிக்குடித்தனத்தக்கு
தயாராகிறார். பார்த்திபனை கண்டாலே எரிந்து விழும்
சாயாசிங், அவரை ஒதுக்கித் தள்ளுகிறார். புதுமனைவி
செய்யும் அலம்பல்களையெல்லாம் பொறுமையுடன்
பொறுத்துக் கொள்கிறார் பார்த்திபன். ஒரு
கட்டத்தில் மனைவி ஆசைப்படகிறார் என்பதற்காக
விவாகரத்துக்கும் சம்மதிக்கிறார். விவாகரத்து
பெற்றப் பிறகு வீட்டில் தனிமையில் இருக்கும்
நேரத்தில், காதலன் ஸ்ரீகாந்துக்கு வேறொரு
பெண்ணுடன் திருமணம் என்ற செய்தி கிடைக்கிறது. அந்த
அதிர்ச்சி தகவலுக்கு பிறகு, கணவனாக வந்த
பார்த்திபன் நல்லவராக தெரிகிறார். தன்னை நன்றாக
கவனித்துக் கொள்ளும் கணவனை உதறித் தள்ளிவிட்டு
விட்டோமே என நினைத்து மனம் வருந்துகிறார்.
மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என ஒரு
மனது சொல்ல... ஈகோ அவரை தடுக்கிறது. சாயாசிங்
என்ன முடிவு எடுக்கிறார் என்பதுதான்
க்ளைமாக்ஸ்.
ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம்
போட்டு வந்த சாயாசிங்கா இது? என்று கேட்கும்
அளவுக்கு நடிப்பில் ஜமாய்த்திருக்கிறார் சாயாசிங்.
குறிப்பாக புதுகணவன் பார்த்திபனுடன் மல்லுக்கு
நின்று வாய் பேசும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
வசன உச்சரிப்பு சாயாசிங்கின் கேரக்டருக்கு வலு
சேர்க்கிறது. தனிமையில் கண்ணீர் வடிக்கும்
காட்சிகள் உருக்கம்.
பார்த்திபனைப்
பொறுத்தவரை வழக்கமான கேரக்டர்தான். அதே
கவிதைத்துவ வசனங்களுடன், சோக முகத்துடன்
மார்க்குகளை அள்ளுகிறார். காமெடிக்கு கருணாஸ்.
அலுப்பு தெரியாமல் இருக்க அவ்வப்போது வந்து
கலகலப்பூட்டுகிறார்.
அறிமுக டைரக்டர் முதல்
படத்திலேயே ரசிகர்களின் மனதை டச் செய்து விட்டார்.
வேலைக்காரி தேவிப்ரியா கேரக்டரை பயன்படுத்திய
விதம், கோர்ட் விவாதம் போன்ற காட்சிகள் இயல்பு
காட்சிகள். வழக்கமான பார்த்திபனின் இரட்டை அர்த்த
வசனங்கள், நக்கல் நையாண்டிகள் இல்லாதது படத்தின்
இன்னொரு ப்ளஸ். பரத்வாஜின் இசையில் பாடல்கள்
கேட்கலாம்.
©2008
All Rights Reserved
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE
send your comments and
corrections
|