"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"சத்யம்" -விமர்சனம்





காக்க காக்க பாணியில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக துணிச்சலான போலீஸ் அதிகாரியை காட்டியிருக்கும் படம் சத்யம். கொஞ்சம் அரசியலையும், ரவுடியிசத்தையும் கலக்கி மசாலாவாக படைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ராஜசேகர். மிடுக்கான துடிப்பு மிக்க இளம் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால். தப்பு செய்கிறவர்களை பின்னியெடுத்து பிரபலமாகிறார்.



அந்த நேரத்தில் முதலமைச்சர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர... முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கோட்டா சீனிவாசராவ் மற்றும் 3 அமைச்சர்கள் முயற்சிக்கிறார்கள். இந்த போட்டியில் மற்ற 3 மந்திரிகளையும் போட்டுத் தள்ளுமாறு சீனிவாசராவ் தனது அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார். 3 மந்திரிகளும் கொல்லப்படும் நிலையில் கொன்றது வேறொரு நபர் என்று தெரியவருகிறது. 3 மந்திரிகளை கொன்றது யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சீனிவாசராவ் விழிக்கிறார். கொலையாளிகளை கண்டுபிடிக்க விஷால் நியமிக்கப்படுகிறார். படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. உண்மையான கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படும் நேரத்தில், குழந்தைகள் சாப்பிடும் ஐஸ்க்ரீமில் போதை மருந்தை கலக்கும் கும்பல் சிக்குகிறது. இந்த கும்பலுக்கெல்லாம் தலைவன் மந்திரி சீனிவாசராவ் என்று தெரியவர.. கொதித்தெழும் விஷால், அவரை சட்டத்தின் முன் நிறுத்த திட்டமிடுகிறார்.



விஷால் விரிக்கும் ‌சட்ட வலையில் சிக்காமல் தப்பிக்கும் சீனிவாசராவ், விஷால் மீது கொலைப்பழி சுமத்தி ஜெயிலுக்குள் தள்ளுகிறார். போலீஸ் நுணுக்கத்துடன் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் விஷால் சமூக விரோதமாக செயல்படும் மந்திரியை எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதி கதை. விஷாலுக்கு அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க சொல்லித்தர வேண்டுமா என்ன? சிக்ஸ் பேக் உடலுடன் தோன்றி மிரட்டியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல் காட்சியில் தோன்றும் போது காதலனாகவும், குழந்தைகளுடன் குழந்தையாகவும், போலீஸ் நிலையத்தில் மிடுக்கான போலீசாகவும், ரவுடிகளை பந்தாடும் காட்சிகளில் ரவுடிகளுக்கெல்லாம் ரவுடியாகவும் பல பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்‌கிறார்.



குறிப்பாக கொலைகாரன் பயன்படுத்தும் ஊசி, மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கியவன் என கிடைத்தவைகளையெல்லாம் துப்புக்களாக்கி கொலையாளிகளை சுற்றி வளைக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது. குசேலன் படத்தி்ல் எப்படி நயன்தாரா கவர்ச்சிக்கு மட்டும் பயன்பட்டாரோ... அதே நிலைதான் இந்த படத்திலும். சிக்ஸ்பேக் உடல் கட்டுடன் விஷால் தோன்றும் பாடல் காட்சியில் அவருக்கு நிகராக சிக்கென்ற உடல்கட்டுடன் கிளுகிளுப்பான ஆட்டம் போடும் நயன்தாரா கிளுகிளுக்க வைக்கிறார். சின்னஞ்சிறு வாண்டுகளுடன், நயன்தாரா நடத்தும் காமெடி கச்சேரி ஆறுதல் அளிக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் கேமரா சண்டைக்காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையை இன்னும் மெருகேற்றியிருக்கலாம். ஆக்ஷனில் செலுத்திய கவனத்தில் கொஞ்சத்தையாவது திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் சத்யம் சக்கை போடு போட்டிருக்கும்.


"கனவு தொழிற்சாலை"
தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.
"தமிழ் சினி டைரக்டரி"
தமிழ் திரையுலக திரட்டு.

KANAVU THOZHIL SALAI
Tamil Cinema Fortnightly Magazine
TAMIL CENI DIRECTORY
Information of TAMIL Cinema Industries


©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections