|
"குசேலன்"-விமர்சனம்

நட்பின் பெருமையை பறைசாற்றும்
வகையில் வந்திருக்கும் இன்னொரு படம் குசேலன்.
மலையாளத்தில் கதபறயும் போள் என்ற பெயரில் வெளியான
படத்தின் தமிழ் ரீமேக்தான் குசேலன். மலையாளத்தில்
மம்முட்டி நடித்த கேரக்டரில் தமிழில் ரஜினிகாந்த்
நடித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் 60
நிமிடங்கள் திரையில் தோன்றுவது தமிழ் குசேலனின்
சிறப்பு. கதையை அழகாக மெருகேற்றி செதுக்கியுள்ள
டைரக்டர் பி.வாசு, ரஜினியுடன் கூட்டணி அமைத்து
மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மலையூர்
கிராமத்தில் முடி திருத்தும் கடை நடத்துகிறார்
பசுபதி. அவரது காதல் மனைவி மீனா மற்றும் 3
குழந்தைகளுடன் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்க்கையை
ஓட்டி வருகிறார்.
படம் தொடங்கி சுமார் அரை மணி
நேரம் வரை பசுபதியின் பாத்திரம் மின்னுகிறது. அந்த
ஊருக்கு சினிமா சூட்டிங்கிற்காக வருகிறார் சூப்பர்
ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த. சூப்பர் ஸ்டார் நடிகரை
பார்க்க ஊரே திரளுகிறது. ரஜினியின் கடைக்கண்
பார்வை தங்கள் மீது பட்டு விடாதா என்று ரசிகர்கள்
ஏங்குகிறார்கள். ஆனால் பால்யகால நண்பரான பசுபதி
மட்டும் ரஜினியை பார்க்க தயங்குகிறார். ஊரில் உள்ள
பலரும் அவரிடம், சூப்பர் ஸ்டாரிடம் போய் உதவி கேள்
என்று சொல்கிறார்கள். 25 வருஷத்துக்கு பிறகு அவரை
பார்த்தால் என்னையெல்லாம் அவருக்கு ஞாபகம்
இருக்குமா? என்று தயங்கும் பசுபதி கடைசியில்
சூப்பர் ஸ்டாரை எப்படி சந்திக்கிறார்? சூப்பர்
ஸடார் தனது பால்ய கால் சினேகிதனை ஞாபகம்
வைத்திருந்தாரா, அவருக்கு உதவி செய்தாரா?
என்பதுதான் படத்தின் மீதி கதை.
படத்தில் பசுபதியின் நடிப்பை
பாராட்டுவதா அல்லது ரஜினியின் சூப்பர் ஸ்டைல்
நடிப்பை பாராட்டுவதா என்று கேட்கும் அளவுக்கு
இருவருமே நடிப்பில் வெளுத்து
கட்டியிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் நடிகர்
அசோக்குமாராக வரும் ரஜினிகாந்த் படம் தொடங்கி 30
நிமிடங்களுக்கு பிறகு வந்தாலும், கடைசி வரை
அவ்வப்போது தோன்றி குசேலனில் மட்டுமல்ல குசேலன்
படத்தை பார்க்கும் ரசிகர்களையும்
உற்சாகப்படுத்துகிறார். ரசிகர்களை சந்திக்கும்
காட்சிகளிலும், சூட்டிங் ஸ்பாட் காட்சிகளிலும்
இயல்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட
இயல்பாகவே இருந்திருக்கிறார் என்று சொல்வதுதான்
பொருத்தமாக இருக்கும். பால்யகால நண்பர் பசுபதியை
பார்த்து கட்டியணைக்கும் காட்சி உருக்கம்.
அவ்வப்போது ரசிகர்களை பார்த்து தலைக்கு மேல் கைகளை
உயர்த்தி கும்பிடு போடும் காட்சிகள் ரசிக்க
வைக்கின்றன. நயன்தாராவுடன் தோன்றும்
பாடல்காட்சிகளில் சிவாஜி படத்தில் பார்த்த
ரஜினியைத்தான் பார்க்க முடிகிறது.
கெட்டப்களில் இன்னும்
கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். பசுபதியின்
உருக்கமான நடிப்பு முத்திரை பதிக்கிறது. படம்
தொடங்கியது முதல் கடைசி வரை பரிதாப தோற்றத்துடன்
தோன்றும் பசுபதி நடிப்பில் இன்னும் தேறிவிட்டார்.
அதிலும் நட்பு என்பது பணத்துக்காக அல்ல என்று
நட்பை போற்றும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
பசுபதிக்கு போட்டியாக சலூன் நடத்தும் கேரக்டரில்
வடிவேலு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.
ஊருக்குள் அதிகமாக முடி
வளர்த்திருப்பவர்களையெல்லாம் கடத்தி வந்து, முடி
வெட்டும் காட்சிகள் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து போட்டோ எடுத்தால்தான்
வீட்டுக்குள் வரவேண்டும் என்று சொல்லி மனைவி சோனா
விரட்டியடிக்க... வடிவேலுவோ... சூப்பர் ஸ்டாரை
பார்க்க செய்யும் முயற்சிகள் கலகல காமெடி. ஆனால்
இரட்டை மீசையை முறுக்கி விட்டு, அவர் செய்யும்
அலம்பல்கள் சில காட்சிகளில் சிரிப்புக்கு பதிலாக
கோபத்தை வரவழைக்கிறது. வடிவேலுவின் மனைவியாக வரும்
சோனா கவர்ச்சி அல்லது காமெடியில் ஏதாவது ஒன்றில்
கவனம் செலுத்தியிருக்கலாம்.
சமையல்காரராக வரும் சந்தானம்,
தான்தான் தயாரிப்பாளர் என்று சொல்லி ரசிகர்களிடம்
பந்தா காட்டும் காட்சிகளில் சிரிப்பு அலை. மீனா
நடிப்பில் மட்டுமல்லாமல் அழகிலும் மெருகு
கூடியிருக்கிறார். கஷ்டப்படும் கணவனுக்கு நல்ல
துணையாக இருந்து ஆலோசனை சொல்வதும், கணவரை
அனுசரித்து செல்லும் காட்சிகளும் பெண்களை கவரும்.
நயன்தாராவை கவர்ச்சிக்காக மட்டுமே
பயன்படுத்தியிருக்கிறார்கள். உதவி இயக்குனராக 2
காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் மம்தா
மோகன்தாசை இன்னும் கொஞ்சம்
பயன்படுத்தியிருக்கலாம். ஊர் பெரியவராக வரும்
லிவிங்ஸ்டன் தோன்றும் காட்சிகளில் எல்லாம்
சிரிப்பும் தொற்றிக் கொள்கிறது. ரஜினியை வைத்து
படம் எடுத்து பெரிய ஆளாகி விடலாம் என்று கூட
இருப்பவர்கள் உசுப்பி விட... லிவிங்ஸ்டனும்,
பசுபதியிடம் சென்று, சூப்பர்ஸ்டாரிடம் ரெகமண்ட்
செய் என்று கெஞ்சும் காட்சிகளிலும் சிரிக்க
வைத்திருக்கிறார். நடிகர் பிரபு பாதுகாப்பு
அதிகாரியாக வந்து அட்டன்டென்ஸ் போடுகிறார்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் இனிமை. சினிமா
சினிமா பாடலில் அர்விந்த் கிருஷ்ணாவின் கேமரா
நன்றாகவே சுழன்றிருக்கிறது.
©2008
All Rights Reserved
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and
corrections
|