"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"பிரச்சினைகளை மாவட்ட, மாநில தலைமையிடம் கூறுங்கள்''
கட்சிக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை!.
தொண்டர்களுக்கு கே.வி.தங்கபாலு எச்சரிக்கை




சென்னை, ஏப்.3-

காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சினைகளை மாவட்ட, மாநில தலைமையிடம் கூற வேண்டும். அதை விட்டு, கட்சிக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கே.வி.தங்கபாலு எம்.பி கூறினார்.

கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறி, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். நேற்று முன்தினம் சென்னை சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டனர். காங்கிரசுக்கு அந்த தொகுதியை பெற்றுத்தரும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயபால் எம்.எல்.ஏ., ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் பிரின்ஸ் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவை நேற்று சந்தித்தனர்.

அவரை சந்தித்து விட்டு வெளியே வந்த ஜெயபால் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, "நல்ல முடிவு வரும் பொறுத்திருங்கள் என்று தங்கபாலு கூறியிருக்கிறார். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அப்படி நாங்கள் எதிர்பார்க்கும் முடிவு வராவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம். தேவைப்பட்டால் இந்த பிரச்சினை தொடர்பாக டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்திக்க இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கே.வி.தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் வாங்கப்படுகின்றன. ஐவர் குழு கூட்டி அந்த மனுக்களை பரிசீலனை செய்வோம். கடந்த ஒரு மாதகாலமாகவே ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. தேர்தலில் போட்டியிட இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் கட்சித்தலைவர்கள் கூடி பேசுவது வாடிக்கையானது.

கன்னியாகுமரி தொகுதி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய கருத்தை சொல்லியிருக்கிறோம். நிர்வாகிகளை பொறுமையாக இருக்க சொல்லியிருக்கிறோம். மற்ற கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லும் கூட்டணியில் இருக்கிறோம்.

கூட்டணி கட்சிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் சில தொகுதிகள் கேட்டார்கள். நாங்கள் சில தொகுதிகளை கேட்டோம். வேண்டுமென்றே கன்னியாகுமரி தொகுதி விட்டுக்கொடுக்கப்படவில்லை. தொண்டர்களை ஒருங்கிணைத்து கூட்டணியை வெற்றி பெற செய்வோம்.

கேள்வி:- தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரசில் கோஷ்டி பூசல் உள்ளதா?

பதில்:- தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலே கிடையாது. நான் தலைவராக வந்த பிறகு கோஷ்டி பூசல்களை கட்டுப்படுத்தியிருக்கிறேன். காங்கிரசின் உள்கட்சி அரங்குகளில் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதை விடுத்து, வெளியே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினைகளை மாவட்ட, மாநில தலைமையிடமோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமோ தெரிவிக்க வேண்டும். அதை மீறி, அறிக்கை விடுவது போன்ற கட்சிக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி:- இலங்கை பிரச்சினையில் காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி உங்கள் கூட்டணியில் இருக்கிறதே?

பதில்:- கூட்டணியில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை. ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களுக்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அந்த சம்பவங்களை மறந்து விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். கூட்டணியில் இருக்கும் அவருடைய கட்சியை உதாசீனப்படுத்த கூடாது. எங்கள் கூட்டணி உறுதியாக வெற்றி பெற நாங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவோம்.

இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections