பாராளுமன்ற தேர்தல் ![]() சென்னை, ஏப்.3- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நேற்று தொடங்கியது. கருணாநிதி தலைமையில் இந்த நேர்காணல் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளில் மட்டும் நேர்காணல் நடத்தப்படுகிறது. அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை 10 மணி அளவில் இந்த நேர்காணல் தொடங்கியது. தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த நேர்காணலில் பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, அமைச்சர்கள் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி மற்றும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியிட விண்ணப்பித்தவர்கள் அமருவதற்கு வசதியாக அலுவலகத்திற்கு வெளியில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. மு.க.அழகிரியுடன் அவரது மகள் கயல்விழியும் வந்திருந்தார். அவர் நேர்காணல் நடைபெறும் அறைக்கு வெளியில் கணவர் வெங்கடேசுடன் அமர்ந்திருந்தார். முதலில் கன்னியாகுமரி தொகுதியில் விண்ணப்பித்தவர்கள் அழைக்கப்பட்டனர். விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டதும், அவர்கள் நேர்காணல் நடைபெறும் அறைக்கு நான்கைந்து பேராக அனுப்பப்பட்டனர். அவர்களிடம் கட்சியில் வகிக்கும் பொறுப்பு, கட்சிக்காக ஆற்றிய பணிகள், தேர்தலுக்கு எவ்வளவு செலவழிப்பீர்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் முடிந்தபின்னர் அந்த தொகுதிக்குள் அடங்கிய நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு, அவர்களிடம் தி.மு.க. தலைமை அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டதாகவும் தெரிகிறது. சில தொகுதிகளில் நிர்வாகிகளிடம் வேட்பாளர் இவர்தான், ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. முதலில் கன்னியாகுமரி தொகுதிக்கு விண்ணப்பித்த எப்.எம்.ராஜரத்தினம், லாரன்ஸ், புஷ்பலீலா, ஹெலன் டேவிட்சன் உள்பட 35 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் ஹெலன் டேவிட்சன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி தொகுதிக்கு 17 பேர் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டனர். முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வித்யாசாகர், முத்துசெல்வம், ஓய்வு பெற்ற வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் கோபால்சாமி, மறைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் இ.கிருஷ்ணனின் மனைவி சந்திராதேவி, பேராசிரியர் கார்த்திகேயன், டாக்டர் ஜெயத்துரை, சார்லிபால், டாக்டர் வெற்றிவேல், வக்கீல் கே.பி.நாராயணன், முத்து விஜயன், பட்டிவீரன்பட்டி டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனாரின் பேரன் பாண்டியநாதன் பாஸ்கரன், ஜி.பி.கிருபாகரன், ராஜேந்திரன், ராஜமன்னார் ஆகியோர் நேர்காணலில் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் தொகுதிக்கு தற்போதைய எம்.பி. பவானி ராஜேந்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் தென்னவன், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உள்பட 40 பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழச்சி தங்கபாண்டியன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவதால் அவர் நேர்காணலுக்கு வரவில்லை. மதுரை தொகுதிக்கு விண்ணப்பித்த அனைவரையும் அழைக்கவில்லை. மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு சில அறிவுரைகள் கூறியதாக தெரிகிறது. மதுரை தொகுதியில் தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரிக்காக இந்த தொகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, கன்டோன்மென்ட் சண்முகம், மோகன், செந்தாமரை ஆகிய பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இதில் டி.ஆர்.பாலு தவிர பலர் வரவில்லை. எனவே தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் மாலை 4.30 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |