"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சத்திரங்களில் திருமணம் நடத்த உரிமையாளர்கள் முன்அனுமதி பெறவேண்டும்
அரசியல் கட்சிகளுக்கு உதவினால் சுயஉதவிக்குழுக்களுக்கு தடை
தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி




சென்னை, ஏப்.3-

"அரசியல் கட்சிகளுக்கு உதவும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சிகளுக்கு சில சுயஉதவிக்குழுக்கள் உதவி புரிவதாக பத்திரிகைகளில் தகவல் வெளிவந்துள்ளது. சுயஉதவிக்குழுவினருக்கு சுழல் நிதி வழங்கப்படுவதால், அதற்காக தவறான நடவடிக்கை எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது. இது பற்றி விசாரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற தகவல் கிடைத்தால், மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர், சம்பந்தப்பட்ட குழுவின் இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்யவும், சுழல் நிதியை நிறுத்தி வைக்கவும் வேண்டும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சுயஉதவிக்குழுக்களாக இருந்தால் கருப்புப் பட்டியலில் வைத்து, நிதி உதவியை நிறுத்த வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளுக்கும் இது பொருந்தும்.

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் கல்யாண மண்டபங்களிலும், பெரிய அரங்குகளிலும் நிறைய பேருக்கு உணவும், அன்பளிப்புகளும் அளிக்கப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதுவும் ஒருவித ஊழல் நடவடிக்கையே ஆகும்.

தேர்தலின்போது கல்யாண மண்டபங்களில் வேட்டி, சேலைகள் மற்றும் உணவு வினியோகம் நடைபெறாமல் இருப்பதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். திருமண மண்டபத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்கூட்டியே மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறவேண்டும்.

வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியில் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அன்னதானம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியில் பெரிய அளவில் யாரும் உணவு வழங்காமல் இருப்பதை கலெக்டர் கண்காணித்து, அப்படி வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள், பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு இடைïறாக இருக்கக்கூடாது. வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்தாலோ, நிலையான இடத்தில் இருக்கக்கூடியதோ, பொதுக்கூட்டங்களில் பயன்படுத்தப்படுபவையோ எவையானாலும் அவற்றை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தப்படக்கூடாது. இதை மீறினால், அந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அரசு அலுவலக சுவர்களில், முதல்-அமைச்சர்கள், முன்னாள் முதல்-அமைச்சர்கள் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்கள், இடம்பெறக்கூடாது. ஆனால், தேசிய தலைவர்கள், கவிஞர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், கவர்னர்கள் இதற்கு விதிவிலக்கு. வேட்பாளர்கள் அல்லது வாக்காளர் மனதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களின் புகைப்படங்களும் அரசு கட்டிடங்களில் இருக்கக்கூடாது.

தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களை, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை வரிசையில் ஒழுங்குபடுத்த, பயன்படுத்திக் கொள்ளலாம். அது பற்றி பின்னர் நாங்களே அறிவிப்போம். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் மூலம் ஓட்டுபோடலாம்.

தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பதவியிடங்களை, நிரப்ப கேட்டுக் கொண்டிருக்கிறோம். கேரளம், புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர், இரு மாநிலங்களில் ஓட்டுப் போடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தங்களது பிரசாரத்துக்கு ஆளுங்கட்சித் தரப்பில் இடைïறு ஏற்படுத்தப்படுவதாக விஜயகாந்த் கட்சியான தே.மு.தி.க.விடமிருந்து புகார் வந்துள்ளது. விஜயகாந்துக்கு பணம் கொடுக்க பேரம் நடப்பதாக பத்திரிகைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக கூறுகிறீர்கள். அவற்றை எங்களிடம் சமர்ப்பித்தால் உரிய முறையில் விசாரிக்கப்படும்.

தேர்தல் பணிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்களின் நலன் கருதி அவர்களுக்கு இன்சூரன்ஸ் அளிப்பது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.

அப்போது, உதவி தலைமை தேர்தல் அதிகாரி சத்யகோபால், இணை ஆணையர்கள் ஜெயஸ்ரீ முரளிதரன், சந்தான கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

நரேஷ்குப்தா கூறுகையில், ``தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிக அளவில் மனுக்கள் வந்தது தொடர்பாக விசாரித்து வரும் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சத்யகோபால், திருச்சி, தஞ்சை பகுதிகளில் சமீபத்தில் ஆய்வு நடத்தினார். இதில், திருச்சியில் வட்டார அளவிலான அதிகாரி ஒருவர் (பி.எல்.ஓ.), அவரே 300 மனுக்களை அனுப்பியதும், கும்பகோணத்தில் ஒரு வருவாய் கோட்ட அதிகாரி, அவசர அவசரமாக மனுக்களை அனுப்பியிருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி சில நாள்களில் முடிந்துவிடும். புதிதாக வந்த மனுக்களை விசாரித்த பிறகே, வாக்காளர் அட்டை கொடுக்கப்படும்'' என்றார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections