திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிப்பு கருணாநிதி வெளியிட்டார் ![]() சென்னை, மார்ச் 30:- மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில், திமுக அணியில் திமுகவுக்கு 21 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான ஒப்பந்தம் நேற்று முன்தினம் செய்துகொள்ளப்பட்டது. இதை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தேர்தல் குழுவில் உள்ள கே.வீ. தங்கபாலு, ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வெ.கி.ச. இளங்கோவன், டி. சுதர்சனம் ஆகியோர், அறிவாலயம் வந்தனர். அங்கு அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், தயாநிதிமாறன் ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இரண்டு மணி நேரம் தீவிர ஆலோசனை நடைபெற்றது. பின்னர், மாலை 6 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி அறிவாலயம் வந்தார். திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது இறுதிசெய்யப்பட்டது. முதலில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதைத் தொடர்ந்து திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டார். திமுக போட்டியிடும் தொகுதிகள்: 1. திருவள்ளூர்(தனி) 2. வடசென்னை 3. தென்சென்னை 4. மத்திய சென்னை 5. திருப்பெரும்புதூர் 6. அரக்கோணம் 7. கிருஷ்ணகிரி 8. தருமபுரி 9. திருவண்ணாமலை 10. கள்ளக்குறிச்சி 11. நாமக்கல் 12. நீலகிரி(தனி) 13. பொள்ளாச்சி 14. கரூர் 15. பெரம்பலூர் 16. நாகப்பட்டினம்(தனி) 17. தஞ்சாவூர் 18. மதுரை 19. ராமநாதபுரம் 20. தூத்துக்குடி 21. கன்னியாகுமரி காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: 1. காஞ்சிபுரம்(தனி) 2. ஆரணி 3. சேலம் 4. ஈரோடு 5. திருப்பூர் 6. கோயம்புத்தூர் 7. திண்டுக்கல் 8. திருச்சிராப்பள்ளி 9. கடலூர் 10 மயிலாடுதுறை 11. சிவகங்கை 12. தேனி 13. விருதுநகர் 14. தென்காசி(தனி) 15. திருநெல்வேலி 16. புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்: 1. விழுப்புரம்(தனி) 2. சிதம்பரம்(தனி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதி: 1.வேலூர் திமுக அணி தொகுதிகள் விவரம் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு, அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். முதல்வர் கருணாநிதி தொகுதிப் பட்டியலை வெளியிட்டதும் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |