"சுவிஸ் வங்கியில் பணம் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள்" - அரசுக்கு அத்வானி கோரிக்கை ![]() புதுடில்லி, மார்ச்.30- "சுவிஸ் வங்கியில் பணம் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரத்தை தெரிவிக்கும் படி, ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டும்'என, பா.ஜ., தலைவர் அத்வானி கூறியுள்ளார். பா.ஜ., மூத்த தலைவரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான அத்வானி கூறியதாவது: சுவிஸ் வங்கியில் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்களால் பல லட்சம் கோடி மதிப்புள்ள பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 மாநாடுகளில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், சுவிஸ் வங்கியில் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் யார் என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைத் தெரிவிக்கும்படி வலியுறுத்த வேண்டும். சுவிஸ் வங்கியில் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை எப்படி பெறுவதென தெரிந்து கொள்வதற்காக, பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் பா.ஜ., சார்பில் ஒரு குழு அமைக்கப்படும். வருண் விவகாரத்தில் அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே பா.ஜ., நடந்து கொள்கிறது. குறிப்பிட்ட நபரை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிடுவது, கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல் முறை. சட்டப்படி இப்படி கூறும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லையென்றே கருதுகிறேன். பா.ஜ.,வுக்கும் சரி, இடதுசாரி கட்சிகளுக்கும் சரி, காங்கிரஸ் தான் முதல் எதிரி. இவ்வாறு அத்வானி கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |