"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

வருண்காந்தி மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது




பிலிபிட், மார்ச்.30-

வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக இந்திரா காந்தியின் பேரன் வருண்காந்தி (வயது 29) போட்டியிடுகிறார். மத கலவரத்தை தூண்டும் வகையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், பிலிபிட் கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அவரை இரண்டு நாள் (இன்று வரை) சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி வருண்காந்தியை கைது செய்து பிலிபிட் மாவட்ட சிறையில் அடைத்ததும் அந்த நகரத்தில் பெரும் கலவரம் வெடித்தது. போலீஸ் நிலையம் மீது கற்கள் வீசப்பட்டன. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பிலிபிட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறி வன்முறை நடந்தது. எனவே, போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தி பா.ஜனதா தொண்டர்களை கலைத்தனர்.

இந்த வன்முறையில் மொத்தம் 63 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 22 பேர் நேற்று மாலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். மற்றவர்கள், இன்னமும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். உயர் மருத்துவ அதிகாரிகளும் பிலிபிட் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், கோர்ட்டில் சரணடையும்போது 144 தடை உத்தரவை மீறி வன்முறையை தூண்டியதாக கோத்வாலி போலீஸ் நிலையத்தில் வருண்காந்தி மீது நேற்று மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை முயற்சி, வன்முறை, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருடன் உத்தரபிரதேச பா.ஜனதா தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, மாவட்ட பா.ஜனதா தலைவர் யோகேந்திர கங்வார், எம்.எல்.ஏ. சுக்லால், முன்னாள் எம்.எல்.ஏ. குப்தா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் பிலிபிட் நகருக்கு வந்த வருண்காந்தியின் தாயாரும் முன்னாள் மத்திய மந்திரியுமான மேனகா காந்தி, "வருண்காந்தி சரணடையும் போது ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரி சம்பவ இடத்தில் இருந்தார். அவர்தான் அனைவரையும் அடித்தார்'' என்று புகார் தெரிவித்தார்.

அந்த புகாரை மறுத்துள்ள பிலிபிட் மாவட்ட கலெக்டர் அசோக் சவுகான், "மேனகா காந்தி கூறும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் தவறானது. போலீஸ் ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில், மேனகா குறிப்பிடும் அதிகாரி, அந்த இடத்திலேயே இல்லை என்பது தெரிய வந்தது. வேறு இடத்தில், அந்த அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்'' என்று கூறினார்.

ஏற்கனவே, கலவரத்தை தூண்டும் பேச்சு உட்பட 3 எப்.ஐ.ஆர்.கள் வருண் காந்தி மீது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது, புதியதாக கொலை முயற்சி வழக்கு ஒன்றும் நேற்று பதிவு செய்யப்பட்டதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்போவதாக நேற்று தகவல்கள் பரவின.

முதலில் இதை மாவட்ட கலெக்டர் மறுத்தார். ஆனால் நேற்று இரவு வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வகுப்பு கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக உத்தரபிரதேச அரசு அறிவித்தது.

இதன் காரணமாக வருண்காந்தி ஒரு வருடத்திற்கு சிறையில் இருப்பார்.

இதற்கிடையே, வாழ்நாளில் முதன் முதலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வருண் காந்தி, நேற்று முன்தினம் இரவில் உறக்கம் இன்றி தவித்தார். சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்ட பிறகு சுமார் 4 மணி நேரத்துக்கு மேல், சிறை சூப்பிரண்டு அறையிலேயே இருந்தார். பின்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக தனி அறையில் அவரை அடைத்தனர். இரவு 10 மணிக்கு, தாயார் மேனகா காந்தி கொண்டு வந்த உணவு அளிக்கப்பட்டது.

தூக்கம் வராமல் தவித்த அவர், நேற்று அதிகாலை 3 மணிக்கு எழுந்து சில புத்தகங்களை படித்தார். பின்னர் சிறிது நேரம் உறங்கி விட்டு காலை 8 மணிக்கு மீண்டும் எழுந்தார். அவருக்கு வி.ஐ.பி. அந்தஸ்து எதுவும் அளிக்கப்படவில்லை. வேறு சிறப்பு வசதிகளும் கிடையாது. கோர்ட்டு அனுமதியுடன் வீட்டு சாப்பாடு மட்டும் வழங்கப்படுகிறது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections