தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு: தி.மு.க. - 21, காங்கிரஸ் - 16 விடுதலை சிறுத்தைகள் -2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 ![]() சென்னை, மார்ச்.29- தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் - அமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று இரவு நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தி.மு.க. 21 இடங்களிலும் காங்கிரஸ் புதுச்சேரி உள்பட 16 இடங்களிலும் போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில், பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இந்த கட்சிகள் ஏற்கனவே முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன. தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினர் கடந்த 12-ந் தேதி அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வின் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தும் இந்த மாதம் 2-ந் தேதி மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தொகுதி பங்கீடு மற்றும் ஒருங்கிணைப்பு குழுவான ஐவர் குழுவினரின் 2-வது ஆலோசனை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் கேட்பது, எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 7.45 மணி அளவில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், அகில இந்திய பொது செயலாளருமான குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அங்கு அவரை வரவேற்ற காங்கிரஸ் ஐவர் குழுவினர், அவரிடம் தமிழக காங்கிரஸ் எடுத்த முடிவினை தெரிவித்தனர். அங்கிருந்து நேராக அண்ணா அறிவாலயத்துக்கு ஐவர் குழுவினருடன் குலாம்நபி ஆசாத் வந்தார். தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். இரவு 8.20 மணிக்கு தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். ஏற்கனவே தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் அங்கு இருந்தனர். கூட்டணி கட்சியினர் அனைவரும் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனும் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இந்த முடிவை முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடையே அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி தி.மு.க. 21 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றது. காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் வந்தது. எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியைச் சேர்த்து காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு கருணாநிதி கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |