மன்மோகன்சிங் வர விரும்பாவிட்டால் என்னுடன் நேரடி விவாதம் நடத்த சோனியாவை அனுப்பலாம் அத்வானி அழைப்பு ![]() லக்னோ,மார்ச்.29- என்னுடன் நேரடி விவாதம் நடத்த மன்மோகன்சிங்குக்கு விருப்பம் இல்லாவிட்டால், சோனியாவை அனுப்பலாம் என்று அத்வானி கூறியுள்ளளார். காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக மன்மோகன்சிங்கும், பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக அத்வானியும் மோதுகிறார்கள். மன்மோகன்சிங், பலவீனமான பிரதமர் என்று அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். பதிலுக்கு, அத்வானி பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றவர் என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார். பிரதமர் பதவிக்கு யார் தகுதியானவர் என்று தன்னுடன் நேரடி விவாதம் நடத்த வருமாறு மன்மோகன்சிங்குக்கு அத்வானி அழைப்பு விடுத்தார். ஆனால், அது அதிபர் ஆட்சி முறை நடக்கும் நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்று கூறி, அந்த அழைப்பை காங்கிரஸ் நிராகரித்து விட்டது. இந்நிலையில், அத்வானி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பத்ரானாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அத்வானி பேசியதாவது:- அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடப்பதைப் போல, நாம் நேருக்குநேர் விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நான் பலதடவை அழைப்பு விடுத்துள்ளேன். பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் விவாதம் நடத்துவதற்கு பதிலாக, தேர்தல் கமிஷனே இதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்யட்டும். இந்த விவாதத்தில் பிரதமருக்கு விருப்பம் இல்லாவிட்டால், அவர் என்னுடன் விவாதம் நடத்துமாறு சோனியாவை கேட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அத்வானி பேசினார். |