"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

உ.பி. கோர்ட்டில் சரண்!.வருண் காந்தி, ஜெயிலில் அடைக்கப்பட்டார்!. தொண்டர்கள் மறியல்: போலீஸ் துப்பாக்கி சூடு:




பிலிபிட், மார்ச்.29-

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் கோர்ட்டில், வருண் காந்தி நேற்று சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வருணுக்கு ஆதரவாக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். அதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன் வருண் காந்தி போட்டியிடுகிறார். மத விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. அதன் பேரில், பார்கேரா போலீஸ் நிலையத்தில் வருண் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட `சி.டி` போலியாக தயாரிக்கப்பட்டது என்றும் பொதுக் கூட்டத்தில் பேசி 15 நாட்கள் கழித்து புகார் அளித்ததன் மர்மம் என்ன என்றும் வருண் காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றார். அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்யுமாறு அலகாபாத் ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முதலில் தீர்மானித்தார். பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டதோடு, டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றார். மேலும், வழக்கு தொடர்பாக பிலிபிட் கோர்ட்டில் நேரடியாக சரண் அடைய முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று அதிகாலையிலேயே டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து பிலிபிட்டுக்கு புறப்பட்டார். முழுவதும் சிவப்பு நிறத்தினாலான உடை அணிந்து இருந்தார். காலை 10 மணி அளவில் பிலிபிட் நகருக்கு வந்தபோது அவரை ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்கள் வரவேற்றனர். அந்த பகுதி முழுவதும் `ஜெய் ஸ்ரீ ராம்` என்ற கோஷம் எழுப்பப்பட்டது.

பிலிபிட் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு செல்லும் வழி முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கூடி விட்டனர். கோர்ட்டுக்கு வருண் காந்தியுடன் பா.ஜனதா மூத்த தலைவரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான கல்ராஜ் மிஸ்ரா வந்தார்.

கோர்ட்டு வளாகத்தில் வருண் காந்தி பேசும்போது, "போலியாக ஒரு சி.டி. தயாரிக்கப்பட்டு எனக்கு எதிராக அரசியல் சதி பின்னப்பட்டுள்ளது. சட்டத்தின் மீது நன்றியுடன் இருக்கிறேன். எனது மக்கள், எனது சமுதாயம், ஒட்டு மொத்த இந்தியா ஆகியவற்றை வலுப்படுத்துவதே எனது கொள்கை. அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் ஜெயிலுக்கு செல்வதால் மட்டுமே எனது கொள்கைகள் வலுப்பெறும் என்றால் நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

பின்னர் தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி விபின் குமார் முன்பு வருண் காந்தி சரண் அடைந்தார். முன்னதாக, வருண் காந்தி சரண் அடைவதற்கான மனுவையும், அவருக்கான ஜாமீன் மனுவையும் அவருடைய வக்கீல்கள் தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, வருண் காந்தியை வருகிற 30-ந் தேதி (நாளை) வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வருண் காந்தி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையும் 30-ந் தேதி நடைபெறும் என்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அன்றைய தினம் போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவித்தார். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வருண் காந்தியை போலீசார் கைது செய்து பிலிபிட் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

வருண் காந்தி சிறையில் அடைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் தொண்டர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பிலிபிட் நகரில் சாலை மறியல் நடத்தினர். மேலும், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் 8 போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.

அதைத் தொடர்ந்து தடியடி நடத்தப்பட்டது. ஆனால், கூட்டம் கலையாததால் துப்பாக்கியில் ரப்பர் குண்டுகளை வைத்து போலீசார் சுட்டனர். அதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. கோர்ட்டில் ஆஜராகும் முன்பே, வருண் காந்தியை போலீசார் கைது செய்யப்போவதாக முதலில் தகவல்கள் வெளியானதால் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.

வருண் காந்தி கைது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் மத்திய மந்திரியுமான கபில்சிபல் கூறுகையில், "அத்வானி நினைத்தால், இந்த விவகாரத்தை நிறுத்த முடியும். ஆனால், அவர் அமைதியாக இருந்து வருகிறார். பொது மக்கள் கண்களுக்கு இந்த விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் விரும்புவது போல தெரிகிறது'' என்றார்.

ஆனால், அதற்கு பதிலளித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பல்பீர் புஞ்ச், "வருண் காந்தியை பா.ஜனதா கட்சி கதாநாயகனாக்க வில்லை. காங்கிரஸ் கட்சியும், பத்திரிகைகளும் தான் சி.டி. பிரச்சினையை பெரிது படுத்தி வருகின்றன'' என்றார்.

வருண் காந்தி சரணடைந்தது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவதேகர் கூறுகையில், "சட்டத்தில் என்ன கூறப்பட்டு இருக்கிறதோ அதை வருண் காந்தி பின்பற்றி இருக்கிறார். சி.டி.யில் இருப்பது தனது பேச்சு அல்ல என்று அவர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் அவருக்கு பா.ஜனதா முழு ஆதரவு அளிக்கிறது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி முகமது அப்சலுக்கு தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. ஆனால், `சி.டி.'யின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்தாமலேயே வருண்காந்தியை தண்டிக்க ஆர்வம் காட்டுகிறது'' என்றார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections