ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் : ராமதாசை சாடிய விஜயகாந்த் ![]() திருநெல்வேலி, மார்ச்.29- ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார், அடுத்த 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் என, ராமதாசை விஜயகாந்த் சாடினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மானூரில் தே.மு.தி.க., ஒன்றிய செயலராக இருந்த முருகன் சமீபத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மானூருக்குச் சென்ற விஜயகாந்த் முருகனின் மனைவி வனிதாவுக்கு ஆறுதல் கூறினார். ஆலங்குளத்தில் நெல்லை வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்துப் பேசியதாவது: நாங்கள் அ.தி.மு.க., - தி.மு.க.,வைப் போல மக்களை ஏமாற்ற மாட்டோம். ஏற்கனவே கூறியபடி தேர்தலில் தனித்து நிற்கிறோம். ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் சாட்டையைக் கையில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. காவிரி, முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளில் பதவி வகிப்போர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லோக்சபா தேர்தல் தேசத்தின் தலைவிதியை மாற்றக்கூடியது. காலையில் "டிவி' பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா(ஜெ.,) முன்பாக ஒருவர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார். அவர், ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; அடுத்த ஐந்து ஆண்டுகள் சேலை துவைப்பார். அவரது பெயரை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். அவரைப்போல நான் யார் முன்னும் நிற்க விரும்பவில்லை; மக்களாகிய உங்கள் முன் நிற்கிறேன். கருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தமுடியும். எம்.ஜி.ஆர்., காலத்தில் பிரபலமான ஒரு கோஷத்தை நாள் கேள்விப்பட்டுள்ளேன். மகன், "பிள்ளையோ பிள்ளை' என நடிக்கிறான். அப்பன், "கொள்ளையோ கொள்ளை' என அடிக்கிறான் எனச் சொல்வர். அந்தக் கொள்ளை தற்போதும் தொடர்கிறது. தமது பிள்ளைகளுக்காக தமிழகத்தையே துண்டாடிவிட்டார். இவ்வாறு விஜயகாந்த் பேசினார். தொடர்ந்து தென்காசி தொகுதியில் வேட்பாளர் யார் என்று தெரிவிக்காமல் முரசு சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இலஞ்சி, செங்கோட்டை, பண்பொழி, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் இரவில் பிரசாரம் மேற்கொண்டார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |