"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தமிழகத்தில் முதல் முறையாக 4 முனை போட்டி










சென்னை, மார்ச் 28-

புதிய வரவான தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதால், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் முதல் முறையாக 4 முனைப்போட்டி நிலவுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் முறையாக 1952-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில் தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன. தமிழகத்தில் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்தது. அந்த கட்சியின் தலைமையில் தான் தேர்தல் கூட்டணிகள் அமைந்தன.

ஆனால், 1967-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 25 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசை வீழ்த்தியது. இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. பின்னர், தி.மு.க.வில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கினார். இதனால், காங்கிரஸ் 3-வது இடத்திற்கு பின்னோக்கி சென்றது. தற்போது, 41 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் காங்கிரசால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால், மாநிலக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை காங்கிரஸ் சந்தித்து வருகின்றது.

கடந்த 1977-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை ஒரு அணியாகவும், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவை ஒரு அணியாகவும் நின்று தேர்தல் களம் கண்டன.

இதில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

1980-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வியூகம் மாறியது. தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து கொண்டது. ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 37 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று, இந்திரா காந்தி பிரதமரானார்.

1984-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணி மாறியது. காங்கிரசுடன் அ.தி.மு.க.வும், ஜனதா கட்சியுடன் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ராஜீவ் காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், 1989-ம் ஆண்டு நடந்த பொதுச் தேர்தலில் அ.தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்தன. வி.பி.சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 1991-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி அமைத்துக் கொண்டன. தி.மு.க. கூட்டணியில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும், ஜனதா தளமும் இடம் பெற்றன. இந்த தேர்தலின்போதுதான், தமிழகத்தில் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமராக பி.வி.நரசிம்மராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், 1996-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழக அரசியலில் ஒரு வித்தியாசமான சூழ்நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வாபஸ் ஆனதால், 1997-ம் ஆண்டு குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்தது. இதனால், 1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., தமிழக ராஜீவ் காங்கிரஸ், ஜனதா கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., ஐக்கிய கம்ïனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது. மீண்டும் வாஜ்பாய் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், கூட்டணியில் ஏற்பட்ட பிளவால் 13 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்தது.

இதனால், 1999-ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வுடன் காங்கிரசும், 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க. ஆகியவை இடம் பெற்றிருந்தன. தமிழ் மாநில காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதனால், தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவியது. தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார்.

2004-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று, மன்மோகன்சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 13-ந் தேதி நடக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து கொண்டுள்ளது. அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க., பா.ம.க., இரு கம்ïனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பாரதீய ஜனதா கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது.

2005-ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலில் கனிசமான ஓட்டுகளை பெற்றதால் தே.மு.தி.க. முக்கிய கட்சியாக கருதப்படுகிறது. இதனால், தமிழகத்தில் முதல் முறையாக 4 முனை போட்டி நிலவுகிறது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections