மாணவியை கொலை செய்ததாக ஆசிரியை உள்பட 3 பேர் கைது ![]() திருச்சி, மார்ச்.28- பள்ளி மாணவியை அடித்துக்கொன்றதாக வகுப்பு ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவி கொலை செய்யப்பட்டது எப்படி? என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை காட்டுப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது 6 வயது மகள் ரோகிணி. இந்த சிறுமி மணப்பாறை- திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். கடந்த 24-ந் தேதி காலை வழக்கம் போல் ரோகிணி பள்ளிக்கு சென்றாள். மாலையில் அவளது தந்தை பழனிச்சாமி ரோகிணியை அழைத்து வருவதற்காக சென்றபோது அவள் பள்ளியில் இல்லை. பல இடங்களில் ரோகிணியை தேடினார்கள். ஆனால் ரோகிணி என்ன ஆனாள் என்றே தெரியாமல் போனதால் ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மணப்பாறை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாணவி ரோகிணியை தேடி வந்தனர். அடுத்த நாள் காலை மாணவி ரோகிணி பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவி ரோகிணியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் குழுவினர் நடத்திய பிரேத பரிசோதனையில் ரோகிணி தண்ணீரில் மூழ்கி மரணம் அடையவில்லை என்றும், தலையில் அடிபட்டு இறந்திருப்பதும், அவர் இறந்த பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தினார்கள். மாணவி ரோகிணி அன்றைய தினம் பள்ளிக்கே வரவில்லை. அவளை பற்றி எதுவும் தெரியாது என்று பள்ளி தரப்பில் மறுத்தனர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி ரோகிணியை பள்ளி ஆசிரியையே அடித்து கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலை நடந்த அன்று மாணவி ரோகிணி வழக்கம் போல் பள்ளிக்கு வந்தாள். அன்றைய தினம் மற்ற மாணவிகளிடம் அவள் சண்டை போட்டு அடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவளுடைய வகுப்பு ஆசிரியை ஜெயராக்கினி மாணவி ரோகிணியை கண்டிப்பதற்காக முரட்டு தனமாக அடித்ததாக தெரிகிறது. ஆசிரியையின் தாக்குதலை பிஞ்சு குழந்தையால் தாங்க முடியவில்லை. மாணவி ரோகிணி மயங்கி கீழே விழுந்தாள். ரோகிணி மயக்கத்தில் தான் இருக்கிறாள் சிறிது நேரத்தில் எழுந்து விடுவாள் என்று ஆசிரியை நினைத்தார். ஆனால் ரோகிணி மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்று கிடந்தாள். ரோகிணியின் மூக்கில் ஆசிரியை ஜெயராக்கினி கைவைத்து பார்த்தார். மூச்சு வராததால் ரோகிணி மரணம் அடைந்ததை அறிந்த ஆசிரியை ஜெயராக்கினி அதிர்ச்சி அடைந்தார். அதனால் மற்ற மாணவிகளை அவசரமாக வெளியேற்றி அனுப்பி விட்டார். இறந்து போன ரோகிணியை பள்ளியில் ஒரு ஓரத்தில் பாயில் படுக்க வைத்துவிட்டு, தனது பள்ளியில் வேலை பார்க்கும் எழுத்தர் ஆரோக்கியராஜ், அலுவலக உதவியாளர் சகாயராஜ் ஆகியோரிடம் விவரத்தை கூறினார். மாணவி பள்ளியில் மரணம் அடைந்த தகவல் வெளியானால் பள்ளிக்கூடத்தின் பெயர் கெட்டுவிடும். அதனால் கொலையை மறைத்து விட அவர்கள் திட்டமிட்டனர். ரோகிணியின் உடலை பள்ளியில் மறைத்துவைத்து விட்டு மாலை வரை காத்து இருந்தனர். பள்ளி முடிந்து அனைவரும் சென்ற பிறகு ரோகிணியின் பிணத்தை தூக்கி சென்று பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்று விட்டனர். மாணவி ரோகிணி விளையாடும் போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து செத்துவிட்டாள் என்று ஊர்மக்களை ஏமாற்ற திட்டமிட்டு இவ்வாறு செய்தனர். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாணவி ரோகிணி கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையொட்டி மாணவி ரோகிணியை அடித்து கொலை செய்ததாக ஆசிரியை ஜெயராக்கினியை (வயது 25) போலீசார் நேற்று கைது செய்தனர். கொலையான மாணவியின் உடலை தூக்கி சென்று மறைத்ததற்காக அதே பள்ளியில் எழுத்தராக பணிபுரியும் ஆரோக்கியராஜ் (39), உதவியாளர் சகாயராஜ் (40) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆசிரியை ஜெயராக்கினியின் கணவர் பெயர் வில்லியம். ஜெயராக்கினி இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்து 2 மாதங்கள் தான் ஆகிறது என்று போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று மணப்பாறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |