இந்தோனேஷியாவில் அணைக்கட்டு உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் 50 பேர் பலி ![]() ![]() ![]() ![]() ![]() ஜகார்தா, மார்ச் 28- இந்தோனேஷியாவில் தலைநகர் ஜகார்தா அருகே உள்ள அணைக்கட்டு ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு 10 அடி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள். ஜகார்தா அருகே ஒரு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஒன்று உள்ளது. அதில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் நள்ளிரவு 2 மணிக்கு திடீர் என்று அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் மளமள என்று அருகில் உள்ள ஊருக்குள் புகுந்தது. இதில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. 2 ஆள் உயரத்துக்கு தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால், 50 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். மேலும் 20 பேரை காணவில்லை. சில இடங்களில் தண்ணீர் மட்டம் வீடுகளின் கூரை உயரத்துக்கு உயர்ந்தது. தண்ணீரில் பிணங்கள் மிதப்பதை டி.வி. சேனல்களின் ஒளிபரப்பில் மக்கள் பார்க்க முடிந்தது. துணிகளும், நாற்காலிகளும், வெள்ளத்தில் மிதந்தன. மீட்புக்குழுவினர் ரப்பர் படகுகளில் வெள்ள நீரில் சென்று தண்ணீரில் உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். "இரவில் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீர் என்று வெள்ள நீர் எங்கள் வீடுகளுக்குள் புகுந்ததால், நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். நல்லவேளை நானும், என் மனைவியும், 4 குழந்தைகளும் மாடியில் தூங்கியதால் நாங்கள் உயிர் பிழைத்தோம். எங்கள் வீடுகளின் கதவுகள் வெள்ளத்தின் வேகத்தால் பிடுங்கி எறியப்பட்டன'' என்று சேட்டோ முலியாடி என்பவர் தெரிவித்தார். சுகாதார அமைச்சரக அதிகாரி ரஸ்டம் பகயா கூறுகையில், "இந்த சம்பவத்தில் இறந்த 50பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 7 அடி உயரத்துக்கு தண்ணீர் இருக்கிறது'' என்று தெரிவித்தார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |