அ.தி.மு.க. கூட்டணியில் சேர பா.ம.க. முடிவு!.டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!. ![]() சென்னை, மார்ச்.27- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேருவது என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்யப் பட்டது. இந்த அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க இடம் பெற்று இருந்தது. தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பா.ம.க. தனித்து செயல்பட்டு வருகிறது. நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது என்பது பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. பா.ம.க.வை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் நடந்து வந்தன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. தலைமை சிறப்பு பொதுக்குழு நேற்று சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் கூடியது. பொதுக்குழுவுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் பாலசுந்தரி வரவேற்றார். பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பாக முதலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு செய்ய பொதுக்குழு உறுப்பினர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கு சீட்டில் தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி என்று இரண்டு வாய்ப்புகளும் அதன் அருகில் சிறிய கட்டமும் இருந்தது. எந்த அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அந்த அணிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உறுப்பினர்கள் `டிக்' செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. பா.ம.க. தொண்டர்கள் உறுப்பினர்கள் இருக்கைக்கே சென்று அவர்கள் அடையாள அட்டைகளை காண்பித்ததும் ஓட்டு சீட்டுகளை வழங்கினார்கள். பின்னாலேயே சிலர் ஓட்டு பெட்டிகளை எடுத்துக் கொண்டு சென்றனர். உறுப்பினர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்து அந்த பெட்டியில் போட்டனர். பின்னர் அவை மேடையிலேயே பத்திரிகையாளர்கள் உள்பட அனைவர் முன்னிலையிலும் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை முடிவில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் வாக்களித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஓட்டுகள் விவரம் வருமாறு:- மொத்தம் பதிவான ஓட்டுகள்-2,581 அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு-2,453 தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு-117 (ஒரு ஓட்டில் இரு அணிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்ததால் அது செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. 10 ஓட்டுகளில் எந்த அணிக்கும் வாக்களிக்கப்படவில்லை. அது நடுநிலை ஓட்டாக கருதப்பட்டது.) தேர்தல் ஆணையாளராக ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் ராயப்பா முன்னிலையில் இந்த தேர்தல் நடந்தது. அவருடன் தேர்தல் பார்வையாளர்களாக ஐகோர்ட்டு மூத்த வக்கீல் அனந்தநாராயணன், தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற வருவாய் அதிகாரிகள் முன்னின்று இந்த தேர்தலை நடத்தினார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் தொண்டர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய மந்திரிகள் அன்புமணி, வேலு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு ஆகியோர் பேசினார்கள். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பொதுக்குழு முடிவுப்படி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் பொதுக்குழு முடிவுப்படி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்வது, இலங்கை பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு, கச்சத்தீவை மீட்பதற்கு இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று 3 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை பேராசிரியர் ராமதாஸ் எம்.பி. வாசித்தார். பொருளாளர் மன்சூர் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஏ.கே.மூர்த்தி உள்பட எம்.பி.க்கள், வேல்முருகன், தமிழரசு, சக்திகமலாம்பாள் உள்பட எம்.எல்.ஏ.க்கள், மு.ஜெயராமன் உள்பட பா.ம.க. மாநில மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |