கருப்பு ரவிக்கைதான் அணியவேண்டும்!. ஏர்இந்தியா பணிப்பெண்கள் சீருடை மாறுகிறது!.தென்மாநில பெண்கள் எதிர்ப்பு!. ![]() ![]() ![]() ![]() சென்னை, மார்ச்.27- ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பணிப்பெண்களின் சீருடை ஏப்ரல் 1-ந் தேதி முதல் மாறுகிறது. இதன்படி, கருப்பு ரவிக்கையை அணிய வேண்டியிருப்பதால், தென்னிந்திய பெண் ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெளிநாடுகளுக்கு, ஏர் இந்தியா விமான சேவையை இந்திய அரசு இயக்கி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம், சர்வதேச விமான நிறுவனங்களிடமிருந்து பல்வேறு வகைகளில் போட்டியையும், நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இதற்காக, தரத்திலும், சேவையிலும், பயணிகளுக்கான வசதிகளை செய்து தருவதிலும் பல்வேறு வகைகளில் மாற்றங்களை ஏர் இந்தியா செய்ய வேண்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச பயணிகளை கவரும் வகையில், தனது விமான பணியாளர்களுக்கு புதிய சீருடையை ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால், தொடக்கத்திலேயே இதற்கு சில விமான பணிப்பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா அறிமுகம் செய்யவுள்ள பணிப்பெண்களுக்கான புதிய சீருடையில், சேலையில் கருப்பு-சிவப்புக் கோடுகள் உள்ளன. இந்த கோடுகள் குறுக்குவெட்டில் அமைந்துள்ளன. இதுபோல், ரவிக்கையில் கருப்பு நிறமும் கலந்து வருகிறது. இதற்கு தென்னிந்தியாவை சேர்ந்த விமான பணிப்பெண்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கருப்பு நிறத்தை அணிவது அபசகுனமானது என்று நினைப்போர் பலர் உள்ளனர். விசேஷ நிகழ்ச்சிக்கு செல்லும்போது கூட பெரும்பாலானோர் கருப்பு நிறத்தை தவிர்ப்பார்கள். இதுபோன்ற காரணங்களால் புதிய சீருடைக்கு, தென்னிந்தியாவை சேர்ந்த விமானப்பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதவிர, தென்னிந்திய பெண்கள் பெரும்பாலும் நிறம் கம்மியாக இருப்பார்கள். ஆனால் களையாக இருப்பார்கள். நிறம் குறைவாக இருப்பவர்கள் சிவப்பு நிற ரவிக்கையை அணிந்தால் எடுப்பாக இருக்கும் என்பதால் தென்னிந்திய விமான பணிப்பெண்கள் சிவப்பு நிறத்தை பெரிதும் விரும்பினார்கள். ஆனால் கருப்பு நிற ரவிக்கையை அணியும்போது, அது தங்களது அழகைக் குறைக்கும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் அவர்களிடையே புதிய சீருடை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விமான பணியாளர்கள் சங்க தலைவர் பரத்குமார் ரவுத் கூறுகையில், ``புதிய சீருடையை பற்றி முடிவெடுக்கும்போது பெண் சிப்பந்திகளை அவர்கள் கலந்தாலோசிக்கவில்லை. இதுமட்டுமின்றி, சேலையில் குறுக்கு கோடுகள் இடம்பெறுவதையும் சில பெண்கள் விரும்பவில்லை'' என்கிறார். இது தொடர்பாக தங்களது எதிர்ப்பினை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை பற்றி விமான பணிப்பெண்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |