"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"நான் கடவுள்" படத்தில் ஊனமுற்றோர்களை இழிவாக காட்டுகிறார்!. டைரக்டர் பாலா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு!.
















சென்னை, மார்ச்.27-

`நான் கடவுள்' படத்தில் ஊனமுற்றோர்களை இழிவாக காட்டுவதாகவும், எனவே, டைரக்டர் பாலா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு ஊனமுற்றோர் நலசங்கத்தின் தலைவர் வரதகுட்டி நேற்று போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

டைரக்டர் பாலாவின் `நான் கடவுள்' திரைப்படம் ஊனமுற்றோர்களை மிகவும் கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றோராக பிறப்பது பாவம் என்று அந்த படத்தில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதாநாயகியை பார்வையற்ற பெண்ணாக காட்டி குருடி என்று கேவலப்படுத்தி உள்ளார்கள். ஊனமுற்றோர்களுக்கு சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லை என்பதுபோல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றோர்களும் இந்த சமுதாயத்தில் வாழ பிறந்தவர்கள் என்று தன்னம்பிக்கை ஊட்டுவதற்காக எங்கள் சங்கம் பாடுபட்டு வருகிறது. இந்த சங்கத்தின் நோக்கத்தை குலைக்கும் வகையில் `நான் கடவுள்' படம் உள்ளது.

எனவே, `நான் கடவுள்' படத்தின் இயக்குனர் பாலா மீது இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த ஊனமுற்றோர் நலசங்க தலைவர் வரதகுட்டி நிருபர்களிடம் கூறும்போது, `நான் கடவுள்' படத்தை பார்த்துவிட்டு, உரிய சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்' என்று குறிப்பிட்டார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections