தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரத்திற்கு வெயில் அதிகரிக்காது!. ஏப்ரல் தொடக்கத்தில் மழை பெய்யலாம்!. வானிலை நிபுணர்கள் கருத்து!. ![]() சென்னை, மார்ச்.27- தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு இப்போது உள்ள வெயில் அளவே நீடிக்கும் என்றும், ஏப்ரல் முதல் வாரத்தில் மழை பெய்யும் என்றும் வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கோடை காலம் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் ஆகும். அதுவும் ஏப்ரல் 15-க்கு மேல் மே மாதம் முடிய 45 நாட்கள் வெயில் வறுத்து எடுக்கும். இதன் காரணமாக மே மாதம் முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக அம்மை நோய் பரவும். அது சென்னையில் இப்போதே பலருக்கு பரவியுள்ளது. கடந்த 10 வருடங்களில் ஏப்ரல் மாதங்களில் அதிக வெயில் அளவாக 2006-ம் ஆண்டு (ஏப்ரல்) 108 டிகிரி பதிவாகி உள்ளது. 10 வருடங்களில் மேமாதங்களில் 2003-ம் ஆண்டு (மே) 113 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. அதாவது வெயில் தீ போல சுட்டெரித்தது. ஆனால் சில வருடங்களில் கோடை காலம், வசந்த காலம் போல மாறியது உண்டு. சிலவருடங்களில் மழை காலம் போல மாறியதும் உண்டு. கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கோடையில் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ததன் காரணமாக தாமிரபரணியில் வெள்ளம் ஓடியது. இந்த வருடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்தது ஆச்சரியமாக இருந்தது. உலகம் வெப்பமயம் காரணமாக வானிலை மாறிவருகிறது.
எனவே இந்த வருடம் கோடை எப்படி இருக்கும் என்று பார்த்தபோது வானிலை நிபுணர்கள் இணையதளங்களில் அறவித்துள்ள கருத்துகள் வருமாறு:- தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு தற்போது உள்ள வெயில் அளவுதான் இருக்கும். பெரிய மாற்றம் இருக்காது. லேசாக கூடும் குறையும். அவ்வளவுதான். ஆனால் ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ந் தேதி தொடங்கி மே மாதம் 28-ந் தேதி முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தபோதிலும் மேலும் 15 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும். |