"தமிழ் சினிமா, யதார்த்தத்தை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கிறது" - கமலஹாசன் ![]() சென்னை, மார்ச்.26- "தமிழ் சினிமா, யதார்த்தத்தை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கிறது" - என்று நடிகர் கமலஹாசன் கூறினார். "சுப்பிரமணியபுரம்' என்ற வெற்றி படத்தை தயாரித்து, டைரக்டு செய்த சசிகுமார், குழந்தைகளை வைத்து, `பசங்க' என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த பாண்டிராஜ் டைரக்டு செய்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, பிரபல பாடகர் பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, நடிகர் கமலஹாசன் பெற்றுக்கொண்டார். `டிரைலரை' கமலஹாசன் வெளியிட, டைரக்டர் அமீர் பெற்றுக்கொண்டார். விழாவில், கமலஹாசன் பேசியதாவது:- "என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாக கருதுகிறேன். சினிமா என்பது மொழி. அதை நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுகிறீர்கள். நான், நாகேசிடம்தான் நகைச்சுவையை கற்றுக்கொண்டேன். சிவாஜியிடம் நடிப்பை கற்றுக்கொண்டேன். பாலமுரளிகிருஷ்ணாவிடம் பாட்டை கற்றுக்கொண்டேன். தமிழ் சினிமா, யதார்த்தத்தை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், வர்த்தகத்தில் இருப்பவர்கள், குழந்தைகளாக இருப்பதால்தான். வெற்றி ஒன்றை மட்டுமே நாடும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் அவர்கள். ஒருவிதத்தில், ரசிகர்களும் இதற்கு காரணம். ஓட்டு போடுவதற்கு சோம்பல்படுவது மாதிரி, நல்ல படம் எது, கெட்ட படம் எது? என்பதை சொல்வதற்கும் சோம்பல்படுகிறார்கள். நாங்கள் எந்த மாதிரி படம் எடுக்க வேண்டும், எந்த மாதிரி படம் எடுக்கக் கூடாது? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். நல்லதையும் சொல்வதில்லை. கெட்டதையும் சொல்வதில்லை. ரசிகர்கள், நல்ல விமர்சகர்களாக இருக்க வேண்டும். நீங்கள் கேட்டால், போதை பொருளைக்கூட நாங்கள் விற்போம். அவ்வளவு நல்ல வியாபாரிகள். சில நல்ல படங்கள் ஓடுவதில்லை. அந்த படங்களை இயக்கிய டைரக்டர்கள் மோட்டுவளையை பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறார்கள். அது, உங்களுக்குத்தான் ஆபத்து. எனக்கு தெரிந்த தணிக்கை அதிகாரி கோட்டி ஆனந்த், செக்ஸ் படங்களை `டிரிபிள் எக்ஸ்' என்ற முத்திரை குத்தி காட்டிவிடலாம் என்றார். இதனாலேயே அவரை வேலையைவிட்டு தூக்கிவிட்டார்கள். அவர் சொன்னதுபோல் செய்தால், குடும்ப பெண்கள் அந்த படங்களை பார்க்காமல் ஒதுங்கி விடுவார்கள். கழிவுநீருக்காக தனியாக குழாய் இருப்பது மாதிரிதான்...இப்படி, பிரித்தால்தான் குழந்தைகள் படம் அதிகமாக வரும். `செக்ஸ்'சை நம் வாழ்க்கையில் இருந்து நிராகரிக்க முடியாது. இல்லையென்றால், ஜனத்தொகை 100 கோடி ஆகியிருக்காது. இந்த ஜனத்தொகையை கொக்கு கொண்டுவந்து போடவில்லை. குடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். `ஸ்லம் டாக் மில்லினர்' படத்தில் இந்தியாவின் ஏழ்மையை காட்டிவிட்டார்கள் என்று குறை சொல்கிறார்கள். இல்லாததை காட்டவில்லை. இருப்பதைத்தான் காட்டியிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் கண்களில் விமானத்தில் இருந்து இறங்கும்போதே தெரிவது, இங்குள்ள வறுமைதான். கட்டிடங்கள் பின்னால்தான் தெரிகிறது. அதைப்பார்த்துவிட்டு அவன், சாப்பிடுவதையே குறைத்து விடுகிறான். நாம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறான். எனக்கு டேனி பாயலை தெரியாது. அந்த படத்துக்கு கிடைத்த வெற்றி, ரகுமானுக்கு கிடைத்த வெற்றி. ஒரு ஆங்கில படத்துக்கு கிடைத்த வெற்றி.'' இவ்வாறு கமலஹாசன் பேசினார். விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, கவிஞர்கள் யுகபாரதி, தாமரை, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், டைரக்டர்கள் அமீர், சசிகுமார், பாண்டிராஜ் ஆகியோரும் பேசினார்கள். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |