8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் பங்கேற்கும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு இன்று ஆரம்பம் ![]() சென்னை, மார்ச்.25- பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் தேர்வு எழுதுகின்றனர். எஸ்எஸ்எல்சி மற்றும் ஓஎஸ்எல்சி தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கின்றன. 2,788 மையங்களில் நடைபெறும் தேர்வை, எட்டு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், ஸ்டேட் போர்டு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. 6,541 பள்ளிகளிலிருந்து எட்டு லட்சத்து 42 ஆயிரத்து 350 பேர் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், நான்கு லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து 25 ஆயிரத்து 838 பேர் மாணவிகள். கடந்த ஆண்டை விட, 59 ஆயிரத்து 125 மாணவர்கள் கூடுதலாக இந்த ஆண்டு தேர்வெழுதுகின்றனர். 2,788 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 1,361 மாணவர்கள் பங்கேற்கும் ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகளும் இன்று துவங்குகின்றன. இன்று மொழி முதற்தாள் தேர்வும், நாளை மொழி இரண்டாம் தாள் தேர்வும் நடக்கின்றன. 30, 31 தேதிகளில் ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளும், ஏப்ரல் 3ம் தேதி கணிதம், 6ம் தேதி அறிவியல் மற்றும் 8ம் தேதி சமூக அறிவியலுடன் தேர்வுகள் முடிகின்றன.கடந்த 18ம் தேதியில் இருந்து மெட்ரிக் -ஆங்கிலோ இந்திய பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த மாணவர்களுக்கு மொழிப்பாட தேர்வுகள் மட்டும் முடிந்துள்ளன. இதர பாடங்களுக்கான தேர்வுகள், ஏப்ரல் 8ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகின்றன. தேர்வு மையங்களில் நான்கு போர்டு மாணவர்களும் கலந்து அமர்ந்து தேர்வை எழுதுவர் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான கேள்வித்தாள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வழங்கப்படுகின்றன. ஒரே கேள்வித்தாளில் முதலில் தமிழ் வழியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கில வழியிலும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.பிளஸ் 2 தேர்வுகளைப் போலவே, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கும் பறக்கும் படை குழுக்கள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 101 கைதிகள், இன்று நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதுகின்றனர். இதற்காக சென்னை புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புழல் சிறைக் கைதிகள் 17 பேரும், கடலூர்-வேலூர், பாளையங்கோட்டை சிறைகளைச் சேர்ந்த 42 பேரும் தேர்வெழுதுகின்றனர். கோவை மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில், கோவை மத்திய சிறைக் கைதிகள் 19 பேர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை சிறைகளைச் சேர்ந்த 23 பேர் என 42 பேர் தேர்வெழுதுகின்றனர். சிறைச்சாலைகளில் தேர்வு மையம் அமைத்து, பொதுத்தேர்வை நடத்துவது இந்தியாவில் இதுவே முதல் முறை. தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி, சிறைத்துறை டி.ஜி.பி., நடராஜ் ஆகியோர் செய்துள்ளனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |