தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் ![]() ![]() ![]() புதுடெல்லி, மார்ச் 25- காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதம் 25 கிலோ அரிசி, தலித் மற்றும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி,வங்கியில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை போன்றவை வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. பாமர மக்கள் நலன் குறித்து அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. லோக்சபாத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. 21 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டார். தவிரவும், மீண்டும் ஆட்சி அமைக்கும் போது பிரதமராக மன்மோகன் சிங் இருப்பார் என்பதையும் உறுதிபடக் கூறினார் சோனியா. மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் சோனியா காந்தி வெளியிட்டார். இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: # லோக்சபா மற்றும் சட்ட சபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யப்படும். 15வது லோக்சபாவில் இதுதொடர் பான சட்ட மசோதா நிறைவேற்றப்படும். அதனால், 2014ம் ஆண்டு நடக்கும் லோக்சபாத் தேர்தலில், பெண்கள் 33 சதவீத அளவுக்கு போட்டியிடுவர். # சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்படும். # வீடில்லாதவர்களும், இடம் பெயர்ந்து வருவோரும் நகரங்களில் மானிய விலையில் உணவைப் பெறும் வகையில், சமுதாய சமையல் அறைகள் அமைக்கப்படும். # தீவிரவாதிகள் மிரட்டலை ஒடுக்க போலீசுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும். # நகரங்களிலும், கிராமங்களிலும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் ஒன்றுக்கு 25 கிலோ உணவுதானியம் வழங்கப்படும். இதற்கேற்ற வகையில், உணவு உரிமைச் சட்டம் இயற்றப்படும். # வளர்ச்சிப் பாதையில் சென்று நிதி சிக்கனத்தை கையாண்டு பணவீக்கத்தை குறைப்போம். வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். # ஆதிவாசி மற்றும் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி அளிக்கப்படும். # விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தேசிய திறன் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். விவசாயிகளின் வீட்டு வாசலிலேயே விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.விளை பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும். # வங்கிகளில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். # அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாட வகுப்பில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் மற்றும் பல்கலைக் கழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையோ அல்லது கல்விக் கடனோ வழங்கப் படும். இந்தக் கல்வி கடன் எந்தவிதமான நிபந்தனை உத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படும். # சாதாரண மக்கள் நிவாரணம் பெறும் வகையில், மிதமான வகையில் சேவை வரிகள் விதிக்கப்படும். # வரும் 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், "பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,)' அறிமுகப் படுத்தப்படும். இந்த வரி அமலுக்கு வந்து விட்டால் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப் படும் இதர வரிகளான "வாட்,' கலால் வரி, சேவை வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்றவை முற்றிலும் ஒழிக்கப்படும். இதனால், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். # இளைஞர்களும், இளம் பெண்களும் (18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள்) நாட்டின் தேசிய கட்டமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில், அவற்றில் அனுபவம் பெறும் வகையில், பயிற்சித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத் தப்படும். இதன்மூலம் அவர்கள் மிகுந்த பலன் பெறலாம். # காங்கிரஸ் கட்சி மட்டுமே அகில இந்திய அளவில் பரவியிருப்பதோடு, அகில இந்திய அளவிலான பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு செயல் படுகிறது. ஐந்து ஆண்டு கால பதவிக்காலத்தை காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாக முடித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, கவுரவம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய தொடர்ந்து பாடுபடும். # மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். குறைவான பணவீக்கத்துடன் உயரிய பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் படும். # விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து, விளைப் பொருட்களை விவசாயிகளின் வீட்டிற்கே சென்று கொள்முதல் செய்யும் முறை துவக்கப்படும். # நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க நீதித்துறை சீர்திருத்தம் தொடரும். போலீஸ் துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். # தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். # கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஜனநாயக மயமாக்கப்படும். # எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் உள்ள அரசு நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு தொடரும். # அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமமும் அகண்ட அலைவரிசை இணைப்புடன் இருப்பது உறுதி செய்யப்படும். # ஏழைக் குடும்பங்கள் அனைத்திற்கும் சுகாதார காப்பீடு திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படும். மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். # நடப்பு 2008-09ம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலைமை நீடித்தது. இருந்த போதிலும், இந்தியா 7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு அறிவித்த சலுகைத் திட்டங்களால் அடுத்த சில வாரங்களில் பலன் கிடைக்கும். # ஆண் - பெண் எண்ணிக் கையில் ஏற்றத்தாழ்வு நிலவுவதைச் சரிக்கட்ட பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப் படும். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதும் உறுதி செய்யப் படும். ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவிகளுக்குப் பண உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வரவு வைக்கப்படும். # இந்திய தேசிய காங்கிரஸ் நான்கு "இசங்களை' எதிர்க்கிறது. நாட்டை நாசமாக்கும் மொழிவெறி, மாநில வெறி, சாதி வெறி, மதசம்பந்தப்பட்ட எல்லாவித வெறி ஆகியவற்றை எதிர்க்கிறோம். # பா.ஜ. ஒரு பிளவு சக்தி. இந்திய தேசியத்தில் இரு பிரிவுகளிடையே மோதலை உருவாக்கும் இதன் கொள்கை பிற்போக்கானது. மதவாதம், பிராந்திய வெறி, மொழிவெறி போன்வற்றை தடுக்கும் அரணாக காங்கிரஸ் திகழ்கிறது. ஐ.மு. கூட்டணி அரசு கையாண்ட ராஜதந்திரமான வெளியுறவுக் கொள்கையால் தான் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. # 3வது அணி என்பது சந்தர்ப்பவாத கட்சிகளைக் கொண்டது. இதற்கு கொள்கை, கோட்பாடு, பொறுப்பு எதுவும் கிடையாது. 3வது அணியும், பா.ஜ.வும் பிற்போக்கான சக்திகள். # இடதுசாரி கட்சிகள் கடந்த 4 ஆண்டுகளில் பொறுப்பாக நடந்து கொள்வில்லை. அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் பொறுப்பின்றி அதிகாரத் தன்மையோடு செயல்பட்டனர். கூட்டணி கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் ஒவ்வொரு முறையும் மீறினர். மதச்சார்பின்மையில் பெருமை அடைவதாக கூறிக் கொண்டு பா.ஜ. வின் வளர்ச்சிக்கு துணை போனார்கள். # காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பிரஜையின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும். ராணுவத்தின் தயார் நிலை அதிகரிக்கப்படும். ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலனுக்கான திட்டங்கள் கொண்டு வரப்படும். மேற்கண்டவாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்தது. கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சோனியாவிடம், "புதிய அரசை வழிநடத்திச் செல்ல தேவையான அனைத்து தகுதிகளையும் ராகுல் பெற்றுள்ளார். இப்போது இல்லாவிட்டாலும், எப்போது அவர் புதிய பொறுப்பை (பிரதமர் பதவி) ஏற்பார்' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சோனியா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் மன்மோகன் சிங்கே. பிரதமர் பதவிக்கு வர பலர் ஆசைப் படலாம். ஆனாலும், பிரதமர் மன்மோகன் சிங்கை யாரும் நெருங்க முடியாது. பிரதமர் பதவிக்கு வருவது தொடர்பாக 2004ம் ஆண்டிலேயே நான் என் நிலையை தெளிவுபடுத்தி விட்டேன். அந்த நிலையில், எந்த மாற்றமும் இல்லை. அதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒன்றும் பிளவுபட்டு சரியவில்லை. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றுடன் அணிசேரவில்லையே தவிர மற்ற மாநிலங்களில் நன்றாக இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி நன்றாகவே இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பற்றி இப்போது பேசவேண்டாம். தேர்தல் முடிவுகள் வந்தபின் பார்த்துக் கொள்ளலாம். காங்கிரஸ் தனி யாகவே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இவ்வாறு சோனியா கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |