"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

6 மாதங்களுக்கு பிறகு பெண் பத்திரிகையாளர் கொலையில் துப்பு துலங்கியது




புதுடெல்லி, மார்ச் 25-

டெல்லி பெண் பத்திரிகையாளர் கொலை வழக்கில் 6 மாதங்களுக்குப் பின் துப்பு துலங்கியுள்ளது. இது தொடர்பாக கொலை கும்பல் தலைவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பணம், நகைகளை கொள்ளை அடிக்கும் நோக்கில் டெல்லியில் கால்சென்டர் பெண் ஊழியரையும் இவர்கள் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் தனியார் டிவி சேனலில் பணிபுரிந்து வந்த பெண் பத்திரிகையாளர் சவும்யா விஸ்வநாதன் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு காரில் வீடு திரும்பியபோது மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது சட்டப் பேரவை தேர்தல் நேரம் என்பதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால் போலீசார் இந்த வழக்கில் அதிக அக்கறை காட்டினர்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இருப்பினும் கடந்த 6 மாதங்களாக துப்பு கிடைக்காமல் தனிப்படை திணறி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி கால்சென்டரில் வேலை பார்த்து வந்த ஜிகிஷா கோஷ் என்ற இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சவும்யா கொலை வழக்கிலும், கோஷ் கொலை வழக்கிலும் பயன்படுத்தப்பட்டது ஒரே துப்பாக்கி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் நேற்று 4 பேர் அடங்கிய கொலை கும்பலின் தலைவன் உட்பட 3 பேரை கைது செய்தனர். இரண்டு பெண்களையும் கொலை செய்ததை இவர்கள் ஒப்புக் கொண்டனர்.

தலைமறைவான மற்றொருவனையும் போலீசார் பின்னர் கைது செய்து விட்டனர். ரவி, பல்ஜித், அமித் மற்றும் அஜய் ஆகிய 4 பேர் அடங்கிய கொலை கும்பலில் ரவி தலைவனாக செயல்பட்டு வந்தான் என போலீசார் தெரிவித்தனர்.

இதில் ரவிகபூர் தான் சவும்யாவை சுட்டதாகவும், இவன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் டெல்லி போலீஸ் இணை கமிஷனர் அஜய் காஷ்யப் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த இரண்டு கொலைகளிலும் கொள்ளை அடிக்கும் நோக்கத்தை தவிர வேறு ஏதும் காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து, போலீஸ் கமிஷனர் தாட்வால் கூறியதாவது:

நிருபர் சவுமியாவை கொலை செய்த குழுவிற்கு, ஜிகிஷா கோஷ் கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய, ரவி, பால்ஜித், அஜய், போபி ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளோம். ரவி என்பவர், சவுமியாவை சுட்டு கொன்றுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளோம். பணத்திற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. உண்மையான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections