தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு ![]() சென்னை, மார்ச் 24:- அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் 1.7.08 முதல் 54 சதவிகித அகவிலைப்படி பெற்று வந்தனர். சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில், ‘மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், 6வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அமல்படுத்தி பல மாதங்களாகி விட்டன. மாநில அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பள விகிதங்களை மாற்றி அமைக்க உள்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இன்னும் பரிந்துரை அளிக்கவில்லை. அதனால், தமிழக அரசு 3 மாத சம்பளத்தை இடைக்கால நிவாரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கியது. ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி சம்பளம் பெறாத நிலையில், அகவிலைப்படியை 10 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மாநில அரசு ஊழியர்களுக்கு 1.1.2009 முதல் 10 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்பட்டு, இனி 64 சதவிகித அகவிலைப்படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1.1.09 முதல் ரொக்கமாக வழங்கப்படும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை மார்ச் மாத சம்பளம் பெற்ற பின்னரே வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியம் ஆசிரியர்கள், பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணிபுரியும் அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும். மதிப்பூதிய, தொகுப்பூதிய ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 பெறுபவர்களுக்கு மாதம் ரூ.20, ரூ.150க்கு குறைவாக ஊதியம் பெறுபவர்களுக்கு மாதம் ரூ.10 உயர்த்தி கொடுக்கப்படும். உதாரணமாக ரூ.5,000 அடிப்படை சம்பளம் மற்றும் 50 சதவீதம் அகவிலை ஊதியம் ரூ.2,500 பெறுபவர்கள், 54 சதவிகித அகவிலைப்படி என்ற கணக்கில் ரூ.4,050 பெற்று வந்தார்கள். இப்போது 10 சதவிகித அகவிலைப்படி உயர்வால் ரூ.4,800 பெறுவார்கள். ரூ.750 கூடுதலாக பெறுவார்கள். இவ்வாறு நிதித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |