சமத்துவ மக்கள் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி!.நெல்லையில் சரத்குமார், சிவகங்கையில் ராதிகா போட்டி!. ![]() சென்னை, மார்ச்.24- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்றும், சிவகங்கை தொகுதியில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் சரத்குமார் கூறினார். பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்வது நேற்று தொடங்கியது. 28-ந் தேதி வரை இந்த மனுக்கள் வாங்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து 25-ந் தேதி (நாளை) மதுரையில் சரத்குமார் விருப்ப மனுக்களை வாங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர் பரிசீலனை முடிந்து வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேற்று சரத்குமார் விண்ணப்பங்களை பெற்றார். தென்காசி, திருவள்ளூர், மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளுக்கு கட்சியின் பொருளாளர் செல்வராஜ் விண்ணப்பித்தார். அவரைத் தொடர்ந்து வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.வி.ரத்தினம், வக்கீல் பன்னீர் செல்வம், இளைஞர் அணி செயலாளர் கராத்தே சரவணன், வடசென்னை மாவட்ட செயலாளர் சேவியர், நாகப்பன் உள்பட பலர் மனு செய்தனர். வடசென்னையில் சரத்குமார், தென்சென்னையில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொது செயலாளர் கரு.நாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ![]() பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் கூட்டணி முடிவு செய்யப்படும். இந்த மாதம் 30-ந் தேதி வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அடுத்த மாதம் 5-ந் தேதி பிரசாரத்தை தொடங்குகிறேன். தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை மற்ற கட்சிகளை பின்பற்றாமல் விவசாயம், பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும். முற்போக்கான சிந்தனைகள் இடம்பெறும். பல கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களை அறிவிக்கின்றன. இலவச டி.வி, கியாஸ் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். மக்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை கொடுத்து அவர்களின் சொந்த காலில் நிற்க வைக்க வேண்டும். இப்போது சில கட்சிகள் கூட்டணிக்காக பேரம் பேசும் அரசியலை நடத்தி வருகின்றன. அவர்களுக்கு கொள்கை இல்லை. மாற்றம் வேண்டும் என்றால், அதை சொல்ல வேண்டும். எடுக்கும் முடிவுகளில் உறுதி வேண்டும். கூட்டணி வேண்டுமா? இல்லையா? என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். வெற்றி வாய்ப்புள்ள 15 தொகுதிகளை பா.ஜ.க.விடம் கேட்டிருக்கிறோம். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். நான் ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு 6 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது உண்மைதான். வெற்றியையும், தோல்வியையும் சமமாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். நெல்லை தொகுதியை பொறுத்தவரை மக்களிடமே அதை விட்டு விடுகிறேன். ராதிகா சரத்குமார் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார். கூட்டணியில் கார்த்திக் கட்சியையும், புதிய தமிழகம் கட்சியையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு சரத்குமார் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |