"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ரூ.1 லட்சம் விலையில் டாடாவின் `நானோ' கார் மும்பையில் அறிமுகம்!.ஏப்ரல் 9-ந் தேதி முதல், பதிவு!.




மும்பை, மார்ச்.24-

ரூ.1 லட்சம் விலையிலான டாடாவின் `நானோ' கார் மும்பையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. வருகிற 9-ந் தேதி முதல் இந்த காருக்கான முன்பதிவு தொடங்குகிறது.

உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையைப் பெற்ற நானோ கார் நேற்று (திங்கள்கிழமை) மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1 லட்சம் விலை கொண்ட இந்த காரினை டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-



`மக்கள் கார்' என்ற அடைமொழியுடன் உருவாகியுள்ள `நானோ' கார் சாலையில் ஓடும் மிகச் சிறிய காராக இருக்கும். இந்த கார்களுக்கான முன்பதிவு அடுத்த (ஏப்ரல்) மாதம் 9-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 23-ந் தேதி முடியும். முன்பதிவிற்கான எண்ணிக்கையில் உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களின் தேவை 6 லட்சம் முதல் 7 லட்சம் வரை உள்ளன. `நானோ' கார்களின் முன்பதிவு 10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

நாட்டின் 1,000 முக்கிய நகரங்களில் 30 ஆயிரம் பகுதிகளில் நானோ கார் முன்பதிவிற்கான விண்ணப்பங்களைப் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.300 ஆகும்.850 நகரங்களில் முன்பதிவிற்கான விண்ணப்பங்களைப் பாரத ஸ்டேட் வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்.

நானோ கார்கள், முதல் கட்டமாக, ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டெலிவரி செய்யப்படும். கார் தயாரிப்பிற்கான முக்கிய மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையிலும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் ரூ.1 லட்சம் விலையிலேயே நானோ காரை அளிக்க முடிவு செய்துள்ளோம். விற்பனையாகும் முதல் ஒரு லட்சம் கார்களுக்கான விலை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

மே.வங்காளத்தில் இருந்து வெளியேறிய இந்த தொழிற்சாலைக்கு பல மாநிலங்கள் வரவேற்பு அளித்தன. இறுதியில் குஜராத் மாநிலம் சனந்த் நகரில் தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. தற்போது அங்கு இதற்கான நிர்மாணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய தொழிற்சாலை நடப்பு ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும்.

சனந்த் நகர் தொழிற்சாலை ஆண்டுக்கு 21/2 லட்சம் நானோ கார்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் இவ்வாலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 5 லட்சம் கார்களாக உயர்த்தப்படும். சனந்த் நகர் ஆலை செயல்பாட்டுக்கு வரும் வரை, நானோ கார்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டாடா நிறுவனத்தின் பந்த் நகர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன. குறிப்பாக முதல் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கார்கள் பந்த் நகரில் தயாரிக்கப்பட்டு வெளிவர உள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கார்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில், வாடிக்கையாளர்கள் வாகன கடன்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள பல்வேறு வங்கிகளுடன் கூட்டுத் திட்டம் மேற்கொண்டு வருகிறது. நானோ காரினையும் கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ள இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ரூ.2,999 மட்டுமே செலுத்தி காருக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம். மீத தொகையை கடன் வாயிலாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. காரின் விலையில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.கடனை திரும்ப செலுத்தி முடிப்பதற்கான காலம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகவும், அதிகபட்சம் 7 ஆண்டுகளாகவும் உள்ளது. வங்கிகள் இந்த காருக்கான கடனுக்கு 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும். இந்த கடன் வசதியை இந்தியன் வங்கி, ஆந்திரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் பேங்க், பேங்க் ஆப் பரோடா மற்றும் தேனா பேங்க் ஆகிய வங்கிகளிடம் பெறலாம். தனியார் துறை வங்கிகள் பலவும் கடன் வசதி அளிப்பது குறிப்பது பரிசீலித்து வருகின்றன.

இந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் வெளியிடும் புகையை விட மிகக் குறைந்த புகையையே வெளியிடும். ஆகவே சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்தவை. 624 சி.சி. திறன் கொண்ட இந்த கார்கள் முதலில் 3 மாடல்களில் வரும். 4 பேர் வசதியாக அமர்ந்து பயணம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26.6 கிலோ மீட்டர் `மைலேஜ்' தரக் கூடியவை.

ஸ்டாண்டர்டு தரத்தில் ஒன்றும், ஏ.சி. வசதியுடன் கூடிய டீலக்ஸ் மாடலில் இரண்டும் ஆக 3 மாடல்களில் இந்த கார்கள் வெளிவரும்.

`நானோ' காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. குறிப்பாக, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, முடிந்தால் அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படும். ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விதிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளன. அவற்றை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி 2011-ஆம் ஆண்டில்தான் தொடங்கும்.

இவ்வாறு ரத்தன் டாடா தெரிவித்தார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections