தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க இன்னும் 3 நாள் -விஜயகாந்த் ![]() காஞ்சீபுரம், மார்ச்.23- காஞ்சீபுரத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தேர்தல் கூட்டணி பற்றி அறிவிக்காமல், தான் அடையாளம் காட்டும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டார். தான் இவ்வாறு கூறுவதில் பல அர்த்தம் உள்ளது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில், விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது எந்த கட்சியுடனாவது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் 6 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று காங்கிரஸ் தரப்பில் கூறியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், விஜயகாந்த் நேற்று பிற்பகல் 3 மணிக்கு காஞ்சீபுரத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கன்னி கோவில் அருகே வேனில் இருந்தவாறு அவர் பேசினார். இந்த பிரசார கூட்டத்தில் அவர், தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது யாருடன் கூட்டணி? என்பதை அறிவிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எந்த கட்சியுடனும் கூட்டணி சேராது என்பதையும், தனித்தே போட்டியிடும் என்பதையும் அப்போது அவர் சூசகமாக அறிவித்தார்.திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்த் பேசுகையில் கூறியதாவது:- அண்ணா பிறந்த ஊரிலிருந்து முதன் முறையாக நான் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். நான் முதலில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கலாம் என்றுதான் இருந்தேன். தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வரை விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் நீங்கள் மாறி மாறி பார்த்துவிட்டீர்கள். இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி மத்தியில் கூட்டணி வைத்துக்கொண்டு இருந்தார்கள். கோடி கோடியாக கொள்ளை அடித்தார்கள். உங்களுக்கு ஏதாவது கொடுத்தார்களா? அல்லது உங்களுடைய வறுமை தீர்ந்ததா? தமிழ்நாட்டில் வற்றாத நதி எது என்றால் காவிரி. அந்த காவிரி நதி நீர் பிரச்சினையை இதுவரை தீர்த்து வைத்தார்களா? முல்லைப் பெரியார் அணையில் இருந்து ஒரு 10 அடி தண்ணீரை கூட்டிக் கொடுத்து இருந்தால்கூட தேனி பகுதியில் இருக்கின்ற 10 லட்சம் ஏக்கர் நிலம் நன்றாக பயன் அடைந்து இருக்கும். உங்கள் ஊர் பக்கம் இருக்கின்ற பாலாறில் தண்ணீர் ஓடுகிறதா? வேலூர், திருப்பத்தூர், காஞ்சீபுரம் ஆகிய பகுதிகள் விவசாய நிலங்கள் இல்லாமல் குறைந்து வருவதற்கு காரணம் அங்கு மணலுக்கு அடியில் தண்ணீர் ஓடுகிறது. பாலாறுக்கு வரக்கூடிய தண்ணீரின் நீரோட்டத்தை ஆந்திராவில் அணைக்கட்டி தடுத்து நிறுத்துகிறார்கள். இதைத்தான் நாம் வேண்டாம் என்கிறோம். இதை தட்டிக்கேட்க வேண்டியது யார்? தட்டிக்கேட்கவேண்டிய இந்திய அரசாங்கம் தட்டிக்கேட்காததால் மக்களாகிய நாம்தான் தட்டிக்கேட்கவேண்டும். ஓட்டை மட்டும் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். பதவியில் இருந்து கொண்டு அவர்கள் இஷ்டத்திற்கு நாட்டாமை செய்வார்கள். இதற்காக நாம் போராடவேண்டும். நான் உங்களுக்காக போராடுவேன். மக்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது பிழைப்பு நடத்துவதற்கு அல்ல. உங்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். பாராளுமன்ற தேர்தல் என்றால் பொதுமக்களாகிய நீங்கள், `நமக்கு என்ன?' என்று நினைக்கக் கூடாது. விஜயகாந்துக்கு ஓட்டுப் போட்டால் ஒரு பாராளுமன்ற தொகுதியில் ஜெயிப்பாரா? அல்லது 2 தொகுதிகளில் ஜெயிப்பாரா? என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். ஒரு பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றாலே அங்கு சென்று தட்டிக்கேட்க முடியும். இதை மறந்து விடக்கூடாது. இப்போது நான் வேறு ஒரு பிரச்சினைக்கு வருகிறேன். இங்கு பத்திரிக்கை நிருபர்கள், பொதுமக்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள். விஜயகாந்த் மவுனமாக இருக்கிறார். விஜயகாந்த் கூட்டணியை நம்பிக்கொண்டு இருக்கிறார். இன்று நடைபெறும் கூட்டத்தில் மவுனத்தை கலைத்து விடுவார். நாளைக்கு கலைத்து விடுவார் என்று செய்திகளை வெளியிடுகிறார்கள். விஜயகாந்த் தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மவுனத்தை கலைப்பதற்கு நான் என்ன சாமியாரா? எந்த கட்சியுடனாவது கூட்டணிக்கு செல்கின்றேன் என்று சொன்னேனா? நான் மவுனமாக எனது வேலையை செய்து கொண்டு இருக்கிறேன். பத்திரிக்கையாளர்கள் அவரவர் இஷ்டம்போல் எழுதிக்கொள்கிறார்கள். நான் அன்று முதல் என்ன சொல்லி வருகிறேன். தெய்வத்தோடும், மக்களோடும்தானே கூட்டணி என்று சொல்லி வருகிறேன். இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன். யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்? சரி.. யாரிடமும் கூட்டணி வேண்டாம் என்று சொல்கின்றீர்கள் அல்லவா. நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டுப் போடுவீர்களா? ஓட்டுப் போட வேண்டும். இதில் பல அர்த்தம் உள்ளது. எனக்கு ஓட்டுப் போட்டால்தான், "என் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள்?'' என்று நான் கேட்க முடியும். இதுவரை நான் எந்த கட்சியுடனும் செல்லவில்லை. இப்போது சொல்லுங்கள் நான் போகிறேன். தி.மு.க. கூட்டணிக்கு போக வேண்டுமா? என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்வதினால் ஜெயலலிதாவுக்கு கோபம் வரும். அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்ல வேண்டுமா? சரி இரண்டு கட்சியுமே வேண்டாம். நான் சொல்கின்ற ஆளுக்கு ஓட்டு போடுவீர்கள் அல்லவா. நான் அடையாளம் காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் ஓட்டு போட வேண்டும். ஏன் இதையெல்லாம் கேட்கிறேன் என்றால் இந்த விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார்? என்று எல்லோருக்கும் புரியாமல் இருக்கிறது. நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஆனால் என்னுடைய மக்களை நான் நல்லபடியாக வாழ வைக்காமல் இந்த விஜயகாந்த் போகவே மாட்டான். காசுக்காக ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தால் நான் இப்படியெல்லாம் வந்திருக்க மாட்டேன். என்றைக்கோ சூட்கேசை வாங்கிக்கொண்டு நான் பாட்டுக்கு போய்க்கிட்டு இருந்திருப்பேன். உங்களுக்காகத்தான் நான் போராடுகிறேன். நீங்கள் அவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் என்னதான் செய்யமுடியும்? வேறு வழியில்லாமல், "சரி போய் தொலைகிறது, நாமும் கூட்டணிக்கு போய் விடுவோம். இந்த மக்களை திருத்த முடியாது'' என்று நினைப்பேன். சரி கூட்டணி வேண்டாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள் அல்லவா. எனக்கு நீங்கள் ஓட்டுப் போடவேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும். தே.மு.தி.க. தொண்டர்கள் யாரும் காசுக்கு அடிபணிந்து விடக்கூடாது. வீடுவீடாக ஓட்டுக் கேட்பதற்கு செல்லவேண்டும். காங்கிரசுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்களா? இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் நெசவாளர்களுக்கிடையே யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பதில் எவ்வளவு பிரச்சினை உள்ளது. (கூட்டத்தில் இருந்த ஒருவர் சுயேச்சையாக போட்டியிடவேண்டும் என்றார்) சுயேச்சை என்று சொல்லாதீர்கள். தனித்து போட்டி என்று சொல்லுங்கள். தேர்தல் நடைபெறுவதற்கு நேரம், காலம் அதிகம் உள்ளது. எனக்கு யாரும் நல்லது செய்யவேண்டாம். எனது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யட்டும். இப்போதும் சொல்கிறேன் நான் யாரை அடையாளம் காட்டுகிறேனோ அவர்களுக்கு நிச்சயம் நீங்கள் ஓட்டுப் போடவேண்டும். ஓட்டுக்காக காசு வாங்கினால் நாம் இப்படியேதான் இருப்போம். காசு கொடுத்தால் அந்த காசை தூக்கி வீசுங்கள். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள். இந்தத்தடவை தே.மு.தி.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள். அப்படியில்லையென்றால் நான் யாரை கையை காட்டுகின்றேனோ அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள். எனது தேர்தல் அறிக்கையைத்தான் முதல்-அமைச்சர் கருணாநிதி இன்றுவரை பின்பற்றி வருகிறார். ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கையை நான் வெளியிடமாட்டேன். இவ்வாறு விஜயகாந்த் கூறினார். பேசிய இடங்களில் மக்களிடம் தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவா எனக் கேட்டார். மக்கள் வேண்டாம் என்றனர். இதைத்தொடர்ந்து அவர் காஞ்சீபுரம் தேரடி, செவிலிமேடு, பாலுசெட்டிசத்திரம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தையொட்டி அவர் செல்லும் வழி நெடுகிலும் தே.மு.தி.க. கொடி, தோரணம் கட்டப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலையில் பிரசாரத்தை முடித்துவிட்டு விஜயகாந்த் சென்னை திரும்பினார். மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், நகர செயலாளர் எஸ்.ஏகாம்பரம் ஆகியோர் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் அழைத்து வரப்படுவது போல் யாரும் அழைத்து வரப்படவில்லை.மக்களின் மனநிலையை அறிய வந்ததுபோல் விஜயகாந்த் மக்களிடம் கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றார்.அனைத்து இடங்களிலும் வேனில் நின்றபடியே பேசினார்; மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |