"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

கர்நாடகாவில் சோனியா காந்தி இன்று பிரசாரம் தொடக்கம்




பெங்களூர், மார்ச்.23-

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். தேவநாகரியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

கர்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 30 தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 23-ந் தேதி அன்று நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. எனினும், காங்கிரஸ் சார்பாக அந்த மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். அப்போது, கர்நாடகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள தேவநாகரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே கவனித்து வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் 2004-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 8 இடங்களை காங்கிரஸ் பெற்றது. பா.ஜனதாவுக்கு 18 இடங்கள் கிடைத்தன. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த 8 சட்டசபை இடைத் தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை.

சோனியா கலந்து கொள்ளும் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரிகள் தரம்சிங், எஸ்.எம்.கிருஷ்ணா, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய மந்திரிகள் ஜாபர் ஷெரிப், ஜனார்த்தன பூஜாரி மற்றும் சித்தராமையா ஆகிய முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்குள் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாகவே தோல்வி ஏற்படுவதாக கருதப்படுகிறது. காங்கிரஸ் கோட்டையாக இருந்த தேவநாகரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகள் பா.ஜனதாவிடம் உள்ளன. இரண்டு தொகுதிகள் மட்டுமே காங்கிரசிடம் உள்ளது. எனவே, காங்கிரசின் வலிமையை காட்டும் விதமாக இந்த கூட்டம் நடைபெறும் என்றும் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியான நடிகர் அம்பரீஷ் பங்கேற்க மாட்டார். உடல்நிலை குறைவு காரணமாக கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கட்சியில் அதிருப்தியாக இருக்கும் அவருக்கு பா.ஜனதாவும் மதசார்பற்ற ஜனதா தளமும் வலைவீசி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections