இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் இந்தியாவில் கிடையாது வெளிநாட்டில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ![]() மும்பை, மார்ச்.23- பாதுகாப்பு அளிக்க மாநில அரசுகள் மறுத்து விட்டதால், இந்த ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேரில் பார்க்க முடியாது. அது வெளிநாட்டிற்கு மாற்றப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒரு அங்கம் இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.). இதன் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்தது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்திற்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் ஒப்பந்தம் மூலம் கலந்து விளையாடியது புதுமையாக தெரிந்தது. இந்திய ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்ஜஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடியதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதை தொடர்ந்து 2-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கான போட்டி அட்டவணை கடந்த மாதம் 24-ந்தேதி வெளியிடப்பட்டது. ஏப்ரல் 10-ந்தேதி முதல் மே 24-ந்தேதி முதல் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் (ஏப்ரல் 16 முதல் மே 13-ந்தேதிவரை) அறிவிக்கப்பட்டன.பெரும்பாலான ஐ.பி.எல். ஆட்டங்களும், தேர்தல் தேதிகளும் மோதும் வகையில் அமைந்திருந்தன. தேர்தல் சமயத்தில் இந்த மெகா போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பது கடினம். எனவே ஐ.பி.எல். கிரிக்கெட்டை தள்ளிவைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, பாதுகாப்பு பிரச்சினை விசுவரூபமாக தலைதூக்கியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்தாவிட்டால், தொடர்ந்து சர்வதேச போட்டிகள் வந்து விடும். அதன் பிறகு இந்த ஆண்டு போட்டியை நடத்த முடியாது. இதனால் ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் ஏற்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தங்களது கவலையை தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சம், தேர்தல் தேதியுடன் மோதாத வகையில் புதிய அட்டவணையை தயாரிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால் 2 முறை மாற்றப்பட்ட ஐ.பி.எல். அட்டவணையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதன் பின்னர் 3-வது முறையாக மீண்டும் அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
மத்திய அரசால் துணை ராணுவ பாதுகாப்பு தர முடியாது, போட்டிக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முழு பொறுப்பு என்று உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தெளிவாக கூறியிருந்ததால் புதிய அட்டவணை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலான மாநிலங்கள் தேர்தல் காலத்தில் தங்களால் கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கைவிரித்தன. குறிப்பாக தொடக்க விழா மற்றும் நிறைவு விழா உள்பட அதிக போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்த மும்பையில் போட்டி நடத்துவதற்கு மராட்டிய முதல்-மந்திரியிடம் இருந்து சம்மதம் கிடைக்கவில்லை. மத்திய அரசும் தனது இறுதி முடிவை அறிவிக்காமலேயே இருந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்குமா? என்ற `சஸ்பென்ஸ்' கடந்த 3 வார காலமாக நீடித்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டம் மும்பையில் நேற்று கூடியது. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஷசாங் மனோகர், செயலாளர் என்.சீனிவாசன், ஐ.பி.எல். சேர்மன் லலித்மோடி, ஐ.சி.சி. துணைத்தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் ஐ.பி.எல்.-ன் 8 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு, இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டை வெளிநாட்டிற்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு ஷசாங் மனோகர், லலித்மோடி ஆகியோர் இதனை நிருபர்களிடம் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:- ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக இல்லை என்ற அரசின் மனோநிலை காரணமாக போட்டியை இந்தியாவை விட்டு வேறு நாட்டிற்கு மாற்றும் முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம். இந்த ஆண்டு மட்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் வெளிநாட்டில் நடைபெறும். எந்த நாட்டில் நடத்தப்படும் என்பது ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும். இது தொடர்பாக எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேசி வருகிறோம். போட்டி வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டதற்கு மாநில அரசுகள் தான் காரணம். குறிப்பாக கடைசி நேரத்தில் ஆந்திரா மற்றும் மராட்டிய மாநில அரசுகள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு விட்டன. முதலில் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்த ஆந்திர அரசு, பின்னர் மறுத்து விட்டது. இதே போல் மராட்டிய மாநில மந்திரி எங்களுக்கு எழுதிய கடிதத்தில், மே 13-ந்தேதி வரை இங்கு போட்டியை நடத்த முடியாது என்று தெரிவித்து இருந்தார். நாங்கள் மராட்டியத்தில் மட்டும் 18 ஆட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தோம். இதனால் வேறு வழியின்றி வெளிநாட்டில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். இருப்பினும் இந்த போட்டியின் அமைப்பு முறை, தேதி, நேரம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இந்திய ரசிகர்கள் டி.வி.யில் பார்க்க வசதியாக, போட்டி எங்கு நடந்தாலும் ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடந்தால் முதலாவது ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கும், 2-வது ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கும் தொடங்கும். திட்டமிட்டப்படி 59 ஆட்டங்களும் நடைபெறும். அவற்றை குறைக்கும் எண்ணம் இல்லை. வருமானத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. போட்டியை தரமானதாக நடத்த வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். அதை விட்டுத்தரமாட்டோம். சர்வதேச தரத்திற்கு இணையாக போட்டியை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியாமல் போனதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 2-வது ஐ.பி.எல். போட்டி இங்கிலாந்து அல்லது தென்ஆப்பிரிக்காவில் நடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த போட்டியின் மூலம் (டிவி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்டவை) ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் பணப்புழக்கம் ஏற்படும். ஆனால் இப்போது போட்டி வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டு விட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியம் அணி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படும். முதலாவது ஐ.பி.எல். போட்டியின் மூலம் இந்திய அரசுக்கு ரூ.91 கோடி வருமான வரியாக கிடைத்தது. அதனை இந்த முறை மத்திய அரசு இழக்கிறது. ஐ.பி.எல். போட்டி வெளிநாட்டுக்கு மாற்றப்படுவது ஏமாற்றமாக இருந்தாலும், தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று ஐ.பி.எல். உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான ஷாருக்கான் கூறுகையில், `நாட்டில் தேர்தல் நடத்தப்படுவதை நாங்கள் மதிக்கிறோம். எங்களது விவகாரத்தை விட தேர்தல் தான் பெரிய விஷயம். ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டிற்கு மாற்றியிருப்பதன் மூலம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்திருக்கிறோம்' என்றார். `ரசிகர்கள் வருகை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எல்லா இடத்திலும் எங்களது கிரிக்கெட்டுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்' என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டார். இதற்கிடையே, `ஐ.பி.எல். போட்டி வெளிநாட்டுக்கு மாற்றப்பட்ட செய்தி மிகவும் ஆச்சரியமாக இருந்தது' என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் டேவிட் மோர்கான் தெரிவித்தார். `ஐ.பி.எல். கிரிக்கெட் எங்கு நடக்க போகிறது என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது. மாற்று இடமாக தென்ஆப்பிரிக்கா தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை' என்றும் கூறினார். |