"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் கருணாநிதி நம்பிக்கை




சென்னை, மார்ச்.23-

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உங்களுடைய அணி 40 இடங்களையும் வென்றது. அதுபோல இந்த தேர்தலிலும் வெற்றி கிடைக்குமா?

பதில்:- எங்களது கூட்டணியை மிகவும் எச்சரிக்கையோடு அமைத்து வருகிறோம். வேட்பாளர்கள் தேர்வு - பிரச்சார முறை - போன்ற விïகங்களை மிகவும் சிந்தித்து உருவாக்கிவருகிறோம். தற்போதுள்ள தேசிய நிலை - மாநில சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது 2004-ம் ஆண்டில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி:- அதேபோன்ற வெற்றியை திரும்பவும் பெற என்னென்ன பிரச்சினைகளை முன்நிறுத்துவீர்கள்?.

பதில்:- மத்தியில் நடைபெற்று வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அதிகபட்ச நன்மைகளை பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். துறைமுகம் தொடங்கி விமான நிலையங்கள் விரிவாக்கம் வரை பல்வேறு முனைகளிலும் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற அரசே மிகவும் பொருத்தமானது என்பதை மக்களுக்கு விளக்குவோம். மதவாத சக்திகளின் கையில் அதிகாரம் சென்று விடக்கூடாது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இல்லை என்றால் மதவாத சக்திகளின் கையில் அரசு அதிகாரம் சென்றுவிடும் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்.

கேள்வி:- மத்தியிலும், மாநிலத்திலும் நீங்கள் ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள். ஆளுங்கட்சி என்ற நிலை தேர்தல் முடிவுகளை பாதிக்காதா?.

பதில்:- மக்களுடைய மனோபாவத்தை முழுமையாக பார்த்தால் அரசுக்கு எதிரான மனநிலை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சிறிதும் இல்லை என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.

கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினையையொட்டி - ஏராளமான போராட்டங்கள் நடைபெறுகின்றன. தேர்தலில் இதனுடைய விளைவு எப்படி இருக்கும்?.

பதில்:- இருக்கும் சூழ்நிலையில் எங்களால் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த பிரச்சினை தேர்தல் முடிவுகளை பாதிக்காது. இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி:- விடுதலை சிறுத்தைகள்-பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்திய, மாநில அரசுகள் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றார்கள். இதற்கு எப்படி பதிலளிக்க போகிறீர்கள்?.

பதில்:- இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் ஆற்றியிருக்கிறோம். இலங்கை தமிழர் பிரச்சினையை ராணுவ ரீதியாக தீர்க்க முடியாது; அந்த பிரச்சினையை அமைதியான, அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க வேண்டுமேயன்றி போர் மூலமாக அல்ல; போர் நடைபெற்று வரும் பகுதிகளில் உடனடியாக ஜனநாயக ரீதியான சகஜநிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் மத்திய அரசு செயல்முறைகளை வகுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்து மக்களும், இலங்கை தமிழர்களும், உலக தமிழர்களும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்வை பற்றி தமிழ்நாட்டில் மற்ற எந்த அரசியல் கட்சிகளையும் விட தி.மு.க.தான் மிகுந்த அக்கறை எடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை நன்கறிவார்கள். 1956-ம் ஆண்டில் இருந்து தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கைகள் - நடத்திய போராட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் - செய்த தியாகங்கள் இங்குள்ள அனைவருக்கும் தெரியும்.

இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு. அதைப்போலவே இலங்கையும் இறையாண்மை மிக்க நாடுதான். ஒரு இறையாண்மை மிக்க நாடு மற்றொரு இறையாண்மை மிக்க நாட்டிற்கு எந்த வகையானவேண்டுகோளை விடுக்கலாம், அந்த நாட்டின் மீது எத்தகைய அழுத்தத்தை கொடுக்கலாம், அரசியல் சட்டரீதியாக இருந்து வரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் தெளிவாகவே அறிவார்கள்.

கேள்வி:- பணவீக்கம் சற்று குறைந்திருந்தாலும், விலைவாசி உயர்ந்தபடியே இருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது போன்ற வாதங்களை எதிர்க்கட்சியினர் வைத்து வருகிறார்கள். இது உங்களுடைய தேர்தல் வெற்றியை பாதிக்குமா?.

பதில்:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒட்டுமொத்த பண வீக்கத்தை குறைப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. பணவீக்கம் குறைந்ததின் காரணமாக வாங்கும் சக்தி பெருமளவிற்கு பாதிக்கப்படவில்லை. சராசரி குடும்பங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் - துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சமையலுக்கான மளிகைப்பொருட்கள் போன்றவற்றை மானிய விலையில் வழங்கும் திட்டம் - ஆகியவற்றை அமல்படுத்துவதின் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள். விலைவாசி ஏற்றத்தில் இருந்து ஏழை நடுத்தர குடும்பங்களை பாதுகாப்பதற்கு நாங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்.

கேள்வி:- உங்களது கனவு திட்டமான சேது சமுத்திர திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை - இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனையாக எதைச்சொல்ல போகிறீர்கள்? மேலும் காங்கிரஸ் பயங்கரவாதம் பற்றி மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?.

பதில்:- தென்தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய சேது சமுத்திர திட்டம் பிரமாண்டமான திட்டம் மாத்திரமல்ல; தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராஜரும் இந்த திட்டத்தை ஆதரித்து பிரசாரமே செய்திருக்கிறார்கள். உண்மையிலேயே சொல்லப்போனால் சேது சமுத்திர திட்டம் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வளிக்கக்கூடிய திட்டமாகும். இந்த மாபெரும் திட்டத்தை நிறைவேற்றிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது. இத்திட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது ஒரு சிலர் மதவாத மற்றும் கற்பனை காரணங்களின் அடிப்படையில் எதிர்க்க தொடங்கினார்கள். தற்போது இப்பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் இருந்து வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை சேது சமுத்திர திட்டம் மாத்திரமல்ல; அதைப்போல பல சாதனைகள் நடைபெற்றிருக்கின்றன. கடந்த ஐந்தாண்டு காலத்தில் மத்திய அரசின் சாலை மற்றும் துறைமுக துறையின் மூலமாக தமிழகத்தில் சாலைகள் அமைத்தல், மேம்பாலங்கள் கட்டுதல், கப்பல் தளங்கள் உருவாக்குதல், துறைமுக மேம்பாடு போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக மட்டும் 56,664 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாடு விடுதலை அடைந்ததற்கு பிறகு தமிழகத்தில் இவ்வளவு பெரிய சாதனை அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஏற்பட்டது கிடையாது.

தமிழகத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த மிகப்பெரிய பரிசாகும் இது. இதைப்போல தமிழகத்திற்கு கிடைத்த திட்டங்களின் பட்டியல் நீளமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கைகள், கடுமையான சட்டங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது காங்கிரஸ் பயங்கரவாதம் பற்றி மென்மையான அணுகுமுறையை கையாண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது.

கேள்வி:- "ஸ்பெக்ட்ரம்'' தொடர்பான குற்றச்சாட்டுக்கு எப்படி பதில் அளிக்கப்போகிறீர்கள்?.

பதில்:- "டெலிகாம்'' தொழிலாளர் முன்னேற்ற சங்கம்-இது தொடர்பான விளக்கத்தை அச்சியற்றி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையின் அனைத்து பரிமாணங்களையும் புரிந்துகொள்ள அந்த வெளியீடு உதவும். புதிய உரிமங்கள் கொடுப்பதில் 31-10-2003 அன்று மத்திய அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உரிமங்கள் வழங்குவதற்கும், "ஸ்பெக்ட்ரம்'' வழங்குவதற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது 1999-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய டெலிகாம் கொள்கையாகும். அந்த கொள்கையின்படி "ட்ராய்'' அமைப்பின் பரிந்துரைகளைப்பெற்று - அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட வேண்டும். அதைத்தான் தற்போதும் பின்பற்றியிருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இவ்வளவு உரிமங்கள்தான் வழங்க வேண்டும் என்று எண்ணிக்கைக்குகட்டுப்பாடு தேவையில்லை என்று "ட்ராய்'' பரிந்துரை செய்துள்ளது. மேலும் "ஸ்பெக்ட்ரம்'' வழங்கும் முறையில் ஏல முறை பின்பற்றப்பட கூடாது என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை பின்பற்றித்தான் 2008 ஜனவரி மாதத்தில் 122 உரிமங்கள் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஏலம் விடப்படாததால் இழப்பு ஏற்பட்டது என்று சொல்வதில் எந்த உண்மையும் கிடையாது.

சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதிவு செய்துள்ள பதில் மனுவில் மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை, நிதித்துறை மற்றும் தொடர்புள்ள அனைத்து துறைகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே ஏலம் விடுவதில்லை என்பதை பற்றி முடிவு செய்தது என்றும் அந்த முடிவு மத்திய அரசு ஏற்கனவே பின்பற்றி வரும் கொள்கைக்கு முரண்பாடானதல்ல என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி:- உங்களுடைய அணிக்கு நீங்களே தலைமை பிரசாரகராகவும் இருந்து வருகிறீர்கள். அந்தந்த பகுதிகளுக்கேற்ற உங்கள் சொற்பொழிவு - கூர்மையான உங்களுடைய பதில்கள் - அற்புதமான நகைச்சுவை - தேர்தல் பிரசாரத்திற்கே மிகுந்த பலம் கூட்டுவதாகும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, பழைய வேகத்தோடு இந்த முறை உங்களால் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள முடியுமா?. தி.மு.க.வினர் இதுகுறித்து கவலை கொண்டுள்ளார்களே?.

பதில்:- உங்களுடைய புகழ் உரைக்கு என்னுடைய நன்றி. என்னுடைய கழக உடன் பிறப்புகள் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவர்கள். நான் அவர்களுக்கு தொடர்ந்து எழுதும் கடிதங்களையும் - என்னுடைய அறிக்கைகளையும் முழுமையாக படிப்பவர்கள். அவர்களது சிந்தனைக்கும், உணர்வுக்கும் நான் மிகவும் நெருக்கமானவன். அவர்கள் தேர்தல் முறைகளில் நல்ல பயிற்சி பெற்றிருப்பவர்கள். மருத்துவர்கள் எனக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை அவர்கள் அறிவார்கள். தேர்தல் பிரசாரத்தை நான் மேற்கொள்வேன், பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி :- இந்த தேர்தலுக்கு பிறகு தொங்கு பாராளுமன்றம் ஏற்படுமென்று பரவலாக நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நிலை என்ன?. இடதுசாரிகளின் ஆதரவு தேவை என்றால் உங்களுடைய அணுகுமுறையை எப்படி அமைத்து கொள்ளப்போகிறீர்கள்?.

பதில்:- நல்லவையே நடக்குமென்று நம்புவோமாக. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தெளிவான வெற்றியை இந்திய நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன். ஹேஷ்யங்களைப்பற்றி விவாதித்திட இப்போது நான் விரும்பவில்லை.

கேள்வி:- 1989-ம் ஆண்டு தேசிய முன்னணி அரசிலும் -1996-ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசிலும் பங்கு பெற்றதன் மூலம், சிறிது காலமே நீடித்த மூன்றாவது அணியில் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணியிலும் - ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் நீங்கள் பங்கு பெற்று அவை ஐந்தாண்டு காலமும் ஆட்சியிலே நீடித்தன. இதன் மூலம் முரண்பாடுகள் நிறைந்த மூன்றாவது அணி அரசமைக்க ஏற்றதல்ல என்றும் இரண்டு தேசிய கட்சிகளில் ஒன்று தான் நிலையான அரசை வழங்கிட முடியுமென்றும் தி.மு.க. நினைக்கிறதா?.

பதில்:- ஜனநாயகம் என்பது மக்களின் விருப்பத்தின் மீது கட்டப்படுகிறது. எனவே இதுகுறித்து எவ்வித முடிவிற்கும் என்னால் இப்போது வர முடியாது.

கேள்வி:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படுமானால் தி.மு.க. என்ன செய்யும்?

பதில்:- கத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நாங்கள் காங்கிரசோடு இருப்போம், இருவரும் சேர்ந்தே முடிவெடுப்போம்.

கேள்வி:- கடந்த மூன்று தேர்தல்களில் தொடர்ந்து உங்கள் அணியில் இருந்தும்கூட-உங்களுக்கும், பா.ம.க.விற்கும் மென்மையான உறவு நிலை இல்லை. எதனால் அவர்களை திருப்திப்படுத்த கடினமான சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டது?.

பதில்:- நான் சாதாரணமானவன். அவர்களின் தேவை அதிகம். அதனால் திருப்திப்படுத்த முடியவில்லை.

கேள்வி:- உங்களுடைய குடும்ப உறுப்பினர்களை கட்சியிலே வளர்க்கிறீர்கள். அவர்களின் அனுமதியின்றி அணுவும் அசைவதில்லை என்று எதிர்க்கட்சியினர் சாட்டும் குற்றச்சாட்டுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள்?

பதில்:- இது கேட்டு கேட்டு புளித்துப்போன கேள்வி. பலமுறை இதற்கு நான் பதிலளித்து விட்டேன். குற்றச்சாட்டு குறுகிய மனப்பான்மை கொண்டது, தீய நோக்கம் கொண்டது, குறும்புத்தனமானது. இந்திய நாட்டில் எத்தனையோ குடும்பங்களில் வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதைப்போல வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் என் குடும்பம் மாத்திரம் சில பேருக்கு துருவ நட்சத்திரமாக தெரிகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections