"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

காஞ்சீபுரத்தில் விஜயகாந்த் இன்று பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்




சென்னை, மார்ச்.22-

பாராளுமன்ற தேர்தலுக்கு மக்களிடம் ஆதரவு கேட்டு காஞ்சீபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயகாந்த் பிரசாரம் தொடங்குகிறார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுசெயலாளர் சொ.ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சீபுரம் நகரில் பிற்பகல் 2 மணி அளவில் பிள்ளையார் பாளையம், தேரடி, செவிலிமேடு, பாலுசெட்டி சத்திரம் பகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தே.மு.தி.க. முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது என்பதையும் தமிழ்நாட்டில் பல முக்கிய பிரச்சினைகளை மத்திய அரசின் மூலமே தீர்க்க வேண்டியுள்ளது என்பதையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீடு, பாலாற்று அணை, முல்லைப்பெரியாறு நீர் தேக்கம், ராமேஸ்வரம் மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழர்களின் வாழ்க்கை பிரச்சினை போன்றவை மத்திய அரசின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதும் இதுவரையில் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதையும் அனைவரும் நன்கு அறிவார்கள்.

தமிழ்நாட்டிற்கென உள்ள தனிப்பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், ஊழல் போன்றவற்றை போக்கும் வகையிலும் வருகிற நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தே.மு.தி.க. முக்கிய கடமையாற்ற வேண்டியுள்ளது. ஆகவே நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை பெறும் வகையில் விஜயகாந்தின் நாடாளுமன்ற தேர்தல் சுற்றுப்பயணத்தை அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளும் வகையில் கட்சி தொண்டர்கள் முழு முயற்சியோடு செயல்படுத்தி காட்டிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ராமுவசந்தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections