124 பாராளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம் ![]() புதுடெல்லி, மார்ச்.22- 17 மாநிலங்களை சேர்ந்த 124 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கு, வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு, 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.முதல் கட்டமாக, 17 மாநிலங்களில் உள்ள 124 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 16-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களும், தொகுதிகள் விவரமும் வருமாறு:- ஆந்திரா (22 தொகுதிகள்), கேரளா (20தொகுதிகள்), உத்தரப்பிரதேசம் (16தொகுதிகள்), மராட்டியம் (13தொகுதிகள்), பீகார் (13தொகுதிகள்). சதீஷ்கார் (11தொகுதிகள்), ஒரிசா (10தொகுதிகள்), ஜார்கண்ட் (6தொகுதிகள்), அசாம் (3தொகுதிகள்), அருணாச்சலபிரதேசம் (2தொகுதிகள்), மேகாலயா (2தொகுதிகள்), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1தொகுதி), லட்சத்தீவு (1தொகுதி), மிசோரம் (1தொகுதி), நாகாலாந்து (1தொகுதி), மணிப்பூர் (1தொகுதி), காஷ்மீர் (1தொகுதி). மேற்கண்ட 17 மாநிலங்களில் உள்ள 124 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல், நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். மறுநாள் (31-ந்தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், ஏப்ரல் 2-ந்தேதி. ஏப்ரல் 16-ந்தேதி அன்று ஓட்டுப்பதிவு நடைபெறும். முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதையொட்டி ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்து வெளியிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடப்பதால் தேர்தல் களம் ஏற்கனவே அனல் பறக்க தொடங்கி விட்டது. காங்கிரஸ், தெலுங்கு தேசம், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அறிவித்தது. தற்போது எம்.பி.யாக இருக்கும் 30 பேரில் 25 பேருக்கு மீண்டும் `சீட்' வழங்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரிகளான ஜெய்பால்ரெட்டி, ரேணுகாசவுத்ரி, டி.புரந்தேசுவரி, பல்லம் ராஜூ, பனபகா லட்சுமி ஆகியோரும் அவர்களில் அடங்குவர். ஆந்திராவில் 290 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் நேற்று அறிவித்தது. பீகாரில், பாரதீய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் வழக்கம்போல கூட்டணி அமைத்து விட்டதால் அந்த அணியில் பிரச்சினை எழவில்லை. ஆனால், பீகாரில் லாலுவும், ராம்விலாஸ் பஸ்வானும் சேர்ந்து கொண்டு காங்கிரசுக்கு 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதால் கொதித்து போன காங்கிரஸ் 37 தொகுதிகளில் தனித்து நிற்கப்போவதாக நேற்று அறிவித்தது. ஆனாலும் லாலு இறங்கி வரவில்லை. காங்கிரசுக்கு 3 இடங்களுக்குமேல் கிடையவே கிடையாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அக்கறை காட்ட தொடங்கி உள்ளது. ஜார்கண்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துவிட்ட போதிலும், ஒரு உறுதியான முடிவு இல்லாமல் குழப்பம் நிலவுகிறது. மராட்டியத்தில் கூட்டணி பேச்சுக்கள் சுமூகமாக முடிந்துவிட்டன. பா.ஜனதா, சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும் மோதுகின்றன. இதேபோல கேரளாவில் வழக்கம்போல காங்கிரஸ் அணிக்கும், கம்யூனிஸ்டு அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் 5-வது கட்டமாக மே 13-ந்தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல், ஏப்ரல் 17-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 24-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசிநாள். ஏப்ரல் 25-ந் தேதி மனுக்கள் பரிசீலனை. ஏப்ரல் 28-ந்தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். ஓட்டுப்பதிவு தேதி, மே 13. முதல் கட்ட ஓட்டு பதிவுக்கான நடவடிக்கை தொடங்கிவிட்டதால் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |