நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி ![]() ஹாமில்டன், மார்ச்.22- தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. ஹாமில்டன் டெஸ்டில் ஹர்பஜன் 6 விக்கெட் கைப்பற்ற, நியூசிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து நாட்டில், முதல் முறையாக 3-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இப்போது டெஸ்டிலும் புதிய வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று பிரமிக்க வைத்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டன் செட்டன் பார்க் மைதானத்தில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 279 ரன்களும், இந்தியா 520 ரன்களும் எடுத்தன. பின்னர் 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேற்கொண்டு 166 ரன்கள் சேர்த்தாக வேண்டிய நெருக்கடியுடன் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. பிளைன், முந்தைய நாள் ஸ்கோரான 24 ரன்களுடன் தொடர்ந்து நிதானமாக ஆடினார். மறுமுனையில் ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்த ரோஸ் டெய்லர் வெறும் 4 ரன்களுடன் (30 பந்து) வெளியேற்றப்பட்டார். முனாப் பந்து வீச்சில் `கல்லி' திசையில் நின்ற ஷேவாக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய ஜெசி ரைடர் வந்த உடனேயே ஆக்ரோஷத்தை காட்டினார். இருப்பினும் முதல் இன்னிங்சில் சதம் அடித்தது போல் அழுத்தமாக கால் ஊன்ற முடியவில்லை. முதல்கட்ட வேக தாக்குதலுக்கு பிறகு, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கை பந்து வீச அழைத்த போது நியூசிலாந்து அணிக்கு மேலும் சோதனை ஏற்பட்டது. அவரது பந்து வீச்சில் ரைடர் (21 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் தொடர்ச்சியாக பிராங்ளின் (14 ரன்), பிளைன் (67 ரன், 183 பந்து, 10 பவுண்டரி), வெட்டோரி (21 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் ஹர்பஜன்சிங் சுழல் சூறாவளிக்கு இரையானார்கள். 199 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்ததால், இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த சூழலில் 9-வது விக்கெட்டுக்கு இணைந்த மெக்கல்லம் - ஓபிரையன் ஜோடி நிலைமையை மாற்றினார்கள். தங்கள் அணியின் மோசமான இன்னிங்சை தோல்வியை தவிர்த்தது மட்டுமின்றி, இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தையும் 2 மணி நேரம் தாமதப்படுத்தினார்கள். ஓபிரையன் நன்கு ஒத்துழைப்பு அளிக்க, மெக்கல்லம் அடித்து விளாசினார். ஒரு வழியாக அணியின் ஸ்கோர் 274 ரன்களை எட்டிய போது, இந்த இணை ஹர்பஜன்சிங் பந்தில் பிரிந்தது. ஓபிரையன் 14 ரன்களில் (45 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார். இதற்கு அடுத்த ஓவரில் மெக்கல்லமும் தூக்கியடித்து கேட்ச் ஆக, நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 279 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை கழித்தது போக இது 38 ரன்கள் அதிகமாகும். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் 84 ரன்கள் (135 பந்து, 11 பவுண்டரி) எடுத்தார். இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் 28 ஓவர்கள் பந்து வீசி 63 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். 23-வது முறையாக டெஸ்ட் இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய அவருக்கு, வெளிநாட்டு மண்ணில் இது சிறப்பான பந்து வீச்சாக அமைந்தது. பின்னர் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் ஆடிய இந்திய அணி 5.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் விளாசி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கம்பீர் 30 ரன்களுடனும் (18 பந்து, 6 பவுண்டரி), ஷேவாக்குக்கு பதிலாக தொடக்க வீரராக இறங்கிய டிராவிட் 8 ரன்னுடனும் (14 பந்து, 2 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து மண்ணில், இந்திய அணி டெஸ்டில் வெற்றியை சுவைப்பது 33 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக 1976-ம் ஆண்டு கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்தில் நடந்த டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நீண்ட காலமாக நீடித்த வெற்றி தாகத்துக்கு டோனி தலைமையிலான இந்திய அணி இப்போது விடை கொடுத்திருக்கிறது. ![]() ஸ்கோர் போர்டு முதல் இன்னிங்ஸ் நியூசிலாந்து 279 இந்தியா 520 2-வது இன்னிங்ஸ் மெக்இன்தோஷ் (சி) தெண்டுல்கர் (பி) ஜாகீர்கான் 0 குப்தில் (சி) ஷேவாக் (பி) ஹர்பஜன் 48 பிளைன் (சி) கம்பீர் (பி) ஹர்பஜன் 67 மில்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) முனாப் 2 டெய்லர் (சி) ஷேவாக் (பி) முனாப் 4 ரைடர் எல்.பி.டபிள்ï (பி) ஹர்பஜன் 21 பிராங்ளின் (சி) முனாப் (பி) ஹர்பஜன் 14 மெக்கல்லம் (சி) லட்சுமண் (பி) யுவராஜ் 84 வெட்டோரி (சி) டோனி (பி) ஹர்பஜன் 21 ஓபிரையன் (சி) லட்சுமண் (பி) ஹர்பஜன் 14 மாட்டின் (நாட்-அவுட்) 0 எக்ஸ்டிரா 4 மொத்தம் (102.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 279 விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-68, 3-75, 4-110, 5-132, 6-154, 7-161, 8-199, 9-275 பந்து வீச்சு விவரம் ஜாகீர்கான் 28-7-79-1 இஷாந்த் ஷர்மா 22-7-62-0 முனாப் பட்டேல் 17-2-60-2 ஹர்பஜன்சிங் 28-2-63-6 யுவராஜ்சிங் 7.3-2-11-1 இந்தியா கம்பீர் (நாட்-அவுட்) 30 டிராவிட் (நாட்-அவுட்) 8 எக்ஸ்டிரா 1 மொத்தம் (5.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி) 39 பந்து வீச்சு விவரம் மாட்டின் 3-0-17-0 மில்ஸ் 2.2-0-21-0 *நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. *ஹாமில்டன் மைதானத்தில் 4-வது முயற்சியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது. *டெஸ்ட் விளையாடும் நாடுகளில் நியூசிலாந்து மண்ணில் மட்டுமே தெண்டுல்கர் வெற்றியை ருசிக்காமல் இருந்தார். அவரது நீண்ட கால கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. *இந்திய அணி டோனி தலைமையில் அன்னிய மண்ணில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அவரது தலைமையில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்ட் விளையாடி அதில் 5-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. *நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இது 2-வது முறையாகும். முன்னதாக 1988-ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த டெஸ்டில் இத்தகைய வெற்றியை பெற்றிருந்தது. *இதுவரை மொத்தம் 428 டெஸ்ட் விளையாடி உள்ள இந்திய அணி பெற்ற 99-வது வெற்றி இதுவாகும். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" 33 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயம். சச்சின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். டாஸ் ஜெயித்த பின் பீல்டிங் தேர்வு செய்தது நல்ல விஷயமாக அமைந்தது. இந்திய பந்துவீச்சாளர்களும் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி எனது முடிவை உறுதி படுத்தினர். அடுத்து இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயம். சச்சினுடன் இணைந்து விளையாடுவது சிறப்பான அனுபவம். அவர் நன்றாக விளையாடா விட்டாலும், விளையாடினாலும் அணியின் வெற்றியில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அவர் அளிக்கும் ஆலோசனைகள் அணிக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சரியான அளவில் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் பொறுப்புணர்ந்து ஆடி வருகின் றனர். தொடரை வெல்லும் பட்சத்தில், சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட்டுக்கு வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,'' என்கிறார் இந்திய கேப்டன் தோனி. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |