"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

உயர் ஜாதி,முஸ்லிம்கள் என தேர்தல் சீட் தருவதில் முதல்வர் மாயாவதி புரட்சி




லக்னோ, மார்ச்.21-

பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இன்று, கேரள மாநிலத்தில் இருந்து அவர் சூறாவளி பிரசாரம் தொடங்குகிறார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, உ.பி.,யில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளுக்கும், தனது கட்சி வேட்பாளர்களின் பெயர்களை நேற்று அறிவித்தார். இதில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்கள் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள், குற்றப் பின்னணி கொண்டவர்களும் இதில் கணிசமாக இடம் பெற்றுள்ளனர். திருவனந்தபுரத்தில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.உ.பி.,யை பொறுத்தவரை, லோக்சபா தேர்தல் பணிகளில் ஆளுங் கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மாயாவதி நேற்று வெளியிட்டார்.

பிரதமர்களை உருவாக்கும் மாநிலம் என்று கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில், நாட்டிலேயே மிக அதிக அளவில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதை உறுதி செய்யும் விதத்தில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, `நானே பிரதமர் வேட்பாளர்' என்ற நம்பிக்கையுடன் அரசியலில் காய்களை நகர்த்திவருகிறார்.

3-வது அணியில் அவர் இடம்பெற்றாலும், தேர்தலுக்குப்பிறகுதான் உடன்பாடு என்று அறிவித்த அவர், நேற்று உ.பி. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டார். `தலித்' தலைவரான மாயாவதி, கடந்த சட்டமன்ற தேர்தலில் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுத்து பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடும் ரேபரேலியில், பகுஜன் சமாஜ் சார்பில் ஆர்.எஸ்.சுக்லா நிறுத்தப்பட்டுள்ளார். காங்., பொதுச் செயலர் ராகுலை எதிர்த்து, அமேதி தொகுதியில் ஆஷிஸ் சுக்லா போட்டியிடுகிறார். பா.ஜ.,வின் வருண் காந்தி போட்டியிடும் பிலிபிட் தொகுதியில் புத்சென் வர்மா என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொகுதியான லக்னோவில் அகிலேஷ் தாஸ் குப்தா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிராமண வகுப்பைச் சேர்ந்த 20 பேரும், தாகூர் வகுப்பை சேர்ந்த ஆறு பேரும் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 20 தொகுதிகளில், மற்ற கட்சியில் இருந்து தாவி வந்தவர்களுக்கு அவர் வாய்ப்பு அளித்து இருப்பதுதான். அவர்களில் பெரும்பான்மையினர், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியினர். பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். எங்கள் கட்சியின் பிரசாரம் நாளை (இன்று) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துவங்குகிறது. நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டாலும் உ.பி.,யை மறந்து விட மாட்டேன். அவ்வப்போது உ.பி.,க்கு வந்து நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்துவேன்.உ.பி.,யில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.பகுஜன் சமாஜ் கட்சியில் குற்றப் பின்னணி உடையவர்கள் வேட்பாளர் களாக நிறுத்தப்பட்டுள்ளதாக சில கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புகார் தெரிவிப்போர், முதலில் தங்கள் வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.நாங்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுவதாக, சமாஜ்வாடி கட்சியினர் தெரிவித்துள்ளனர். பா.ஜ.,வின் மூத்த தலைவராக இருந்த கல்யாண் சிங்குடன், தற்போது யார் நெருக்கமாக உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், "எல்லாரது நலனுக்காகவும், எல்லாருக்கும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும்' என்ற கருத்து அடிப்படையில் பகுஜன் சமாஜ் கட்சி செயல்படும்.பிற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்களும் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாத மாயாவதி, 50 நாட்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பிரமாண்ட பேரணியில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections