"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு கடும் நடவடிக்கை!.விதி மீறலை வீடியோ எடுக்க தனி குழு!.தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு




சென்னை, மார்ச்.21-

தமிழ்நாட்டில் மே மாதம் 13-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறலை வீடியோ மூலம் படம் பிடிக்க தனி குழுவை அமைக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளை ஒழுங்கு செய்யும் பணியில் உள்ள முன்னேற்றம், தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்தும் திட்டங்கள், வாக்காளர் பட்டியலுக்கான `டேட்டா' தயாரிப்பு, பதற்றம் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிதல், வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள், அங்கு ஊனமுற்றோர், வயதானவர்கள் வருவதற்கு வசதியாக சாய்தளங்கள் அமைத்தல், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

வாக்குச்சாவடி வாரியாக 100 சதவீதம் வாக்காளர் சரிபார்க்கும் பணியை வாக்குச்சாவடி அதிகாரிகள் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

ஓட்டுப்போட தகுதி உள்ளவர்களில், வேறிடத்துக்கு மாற்றலாகி சென்றவர்கள், வசிப்பிடத்தை மாற்றியவர்கள், குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாமல் இருப்பவர்கள், குடும்பத்துடன் தொடர்பு இருந்தாலும் வேறிடத்தில் வசிப்பவர்கள், இறந்து போனவர்கள் ஆகியோரின் பெயர்ப்பட்டியலை வாக்குச்சாவடி வாரியாக தயாரிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகளை கொண்ட இணைக்குழுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த குழுக்களின் ஒரு குழுவை, தேர்தல் விதிமுறை மீறலை வீடியோ மூலம் படம் பிடிக்க தனியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விதிமுறை மீறல் எந்த இடத்தில், எப்போது நடந்தாலும் வீடியோவில் படம் பிடிக்க வேண்டும். பத்திரிகை, டி.வி.களில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக வரும் செய்திகளை கூட புகாராக எடுத்துக்கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடைமுறையை ஆந்திரா மாநிலத்தில் மேற்கொண்டது, இந்திய தேர்தல் கமிஷனின் பாராட்டை பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections