நடிகை அசின் உதவியாளர் மாயம் : கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு ![]() ![]() பொன்னேரி, மார்ச்.21- நடிகை அசின் உதவியாளரை கண்டு பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நடிகை அசினிடம் பணியாற்றிய உதவியாளர் நல்லமுத்துக்குமாரசாமி மாயமான சம்பவம் குறித்து விசாரிக்க டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட நடிகை அசினிடம் உதவியாளராக பணியாற்றியவர் நல்லமுத்துக்குமாரசாமி. திருவள்ளூர் எஸ்.பி., சாரங்கனிடம், மும்பையில் காணாமல் போன தனது மகனை மீட்டுத் தர வேண்டி அவர் தாயார் நேற்று புகார் மனு கொடுத்தார். புகார் குறித்து பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன் கூறுகையில், "இச்சம்பவம் குறித்து விசாரிக்க என் தலைமையில் சோழவரம், மீஞ்சூர், பொன்னேரி இன்ஸ்பெக்டர்கள் நசீர், மாணிக்கம், தயாளன் உள்ளிட்டவர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மும்பையில் பணியாற்றிவந்த அவர் தங்கியிருந்த விவரம், அவரது அன்றாடப் பணிகள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும். ஒன்றிரண்டு நாளில் விவரம் தெரியவரும். தேவைப்பட்டால் நடிகை அசினிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்' என்றார். நடிகை அசினிடம் உதவியாளராக இருந்தவர் நல்லமுத்து குமார்(வயது 23). சென்னையை அடுத்த செங்குன்றத்தில் வசித்து வரும் இவரது தாயார் சுடலைவடிவு சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகை அசினிடம் உதவியாளராக பணி புரிந்த தன்னுடைய மகன் நல்ல முத்துக்குமாரை ஒரு மாதமாக காணவில்லை என்றும், இது தொடர்பாக அசின் மற்றும் அவரது தந்தை ஜோசப் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். சுடலை வடிவின் வீடு சோழவரம் போலீஸ் எல்லையில் உள்ளதால் பொன்னேரி துணை சூப்பிரண்டு ரங்கராஜன் நேற்று காலை சுடலை வடிவுவிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கடந்த 10 தினங்களுக்கு முன்னர் தான் மும்பை சென்றதாகவும் அப்போது நல்லமுத்து குமார் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அவனை பார்த்ததாக கூறினார் என்று சுடலை வடிவு தெரிவித்தார். 30 நிமிடங்கள் இந்த விசாரணை நடந்தது. இதைத்தொடர்ந்து காணாமல் போன தனது மகன் நல்ல முத்துக்குமாரை கண்டுபிடித்து தருமாறு சுடலைவடிவு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கனிடம் மனு கொடுத்தார். அதன்பேரில் பொன்னேரி போலீஸ் துணை சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் முதல்கட்ட விசாரணைக்காக மும்பை செல்கின்றனர். மேலும் நடிகை அசின், அவரது தந்தை ஜோசப் மற்றும் முத்துக்குமாரின் நண்பர்களிடம் விசாரணையை தொடங்கப்போவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு ரங்கராஜன் நிருபர்களிடம் கூறினார். நடிகை அசினுக்கு சிவசேனா கண்டனம் போலீசார், நடிகை அசினை தொடர்புகொண்டு விசாரித்தபோது, "நல்லமுத்துக்குமாரசாமி என்னிடம் 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். எங்கிருந்து பேசுகிறாய் எனக் கேட்டபோது சிவசேனா அலுவலகத்தில் இருப்பதாக கூறினான்' என கூறினார். இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவசேனா தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் கர்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தல் களத்தில் நிற்கும் சிவசேனா வரலாறு தெரியாமல் நடிகை அசின் எங்கள் கட்சியை களங்கப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். இதை ஒருநாளும் சிவசேனா தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அசின் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் நடிக்கும் படங்களை தமிழகத்தில் ஓட விட மாட்டோம்' என கூறியுள்ளார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |