வக்கீல்கள் 28 நாட்களாக நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது ![]() சென்னை, மார்ச்.20- வக்கீல்கள் கடந்த 28 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திங்கட்கிழமை முதல் வக்கீல்கள் பணிக்கு திரும்புகிறார்கள். சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 19-ந் தேதி போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே வரலாறு காணாத மோதல் நடந்தது. ஐகோர்ட்டு வளாகத்துக்குள் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் 20-ந் தேதி முதல் வக்கீல்கள் கால வரையற்ற கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். தடியடிக்கு உத்தரவிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறி வந்தனர். வக்கீல்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் ஐகோர்ட்டு மோதல் சம்பவம் தொடர்பாக கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், வட சென்னை இணை கமிஷனராக இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ராமசுப்பிரமணி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் உத்தரவால் வக்கீல்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து வக்கீல்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டு மோதல் சம்பவம் தொடர்பாக சென்னையில் நேற்று வக்கீல்கள் சார்பில் போலீசாரை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. பேரணி முடிந்த பிறகு, வக்கீல் போராட்டக் குழு தலைவரும் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத் தலைவருமான ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் அதன் நிர்வாகிகள், கோர்ட்டு புறக்கணிப்புப் போராட்டத்தை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் நிருபர்களுக்கு பால்கனகராஜ் அளித்த பேட்டி வருமாறு:- காவல் துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கோர்ட்டு புறக்கணிப்புப் போராட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வக்கீல்கள் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதி முகோபாத்தியா அளித்த தீர்ப்பில், 2 காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் மூலம், எங்களை போராட்டத்துக்கான வெற்றியின் முதல் படிக்கட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். மேலும் நீதிபதி முகோபாத்தியா எங்களை கோர்ட்டு பணிக்குத் திரும்பும்படியும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அவரது வேண்டுகோளின் படியும், பொதுமக்களின் நலன் கருதியும் நாங்கள் கோர்ட்டு புறக்கணிப்புப் போராட்டத்தை இடைக்காலமாக நிறுத்திக் கொள்கிறோம். எனவே, திங்கட்கிழமை (23-ந் தேதி) முதல் வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டுக்கு பணிக்குத் திரும்புவார்கள். ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிகாரிகள் மட்டுமல்ல மற்ற சில அதிகாரிகள் மீதும் நாங்கள் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும். ஆனால் நீதிமன்ற புறக்கணிப்பு என்ற போராட்டம் இல்லாமல் திங்கட்கிழமையில் இருந்து வேறுவிதமாக போராட்டம் தொடரும். சென்னையில் நடந்த வக்கீல்களின் பேரணி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது. இவ்வாறு அவர் கூறினார். வக்கீல் சங்கங்களின் போராட்ட வாபஸ் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 28 நாட்களாக நடந்து வந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |