"ரூ.15 லட்சம் கேட்டு என்னை மிரட்டினான்'' காணாமல் போன உதவியாளர் பற்றி நடிகை அசின் பேட்டி ![]() ![]() சென்னை, மார்ச்.20- "உதவியாளர் காணாமல் போனதற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,'' என்று நடிகை அசின் கூறினார். உதவியாளர் முத்துக்குமார் மாயமானது தொடர்பாக, நடிகை அசினின் அப்பா ஜோசப்பிடம் கேட்டபோது, ""மூன்று வருடமாக முத்துக்குமார், அசினிடம் டச்சப் பாயாக இருந்தார். கடந்த ஜனவரி 21ம் தேதி வேலையிலிருந்து நின்றுவிட்டார். சம்பளப் பாக்கியும் வாங்கிச் சென்றுவிட்டார். அவர் சொந்த ஊருக்குச் சென்றிருப்பார் என நினைத்திருந்தோம். அவரது அம்மா, அவரை தேடி மும்பை வந்தபோது தான், அவர் ஊருக்கு செல்லவில்லை என்று தெரிந்தது. ""பிப்ரவரி 9ம் தேதி மும்பை போலீசிலும் முத்துக்குமார் குறித்து புகார் கொடுத்துள்ளோம். முத்துக்குமார் தனிப்பட்ட முறையில் வேறு எங்கும் வேலை செய்கிறாரா, எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை,'' எனக் கூறினார். பிரபல நடிகை அசினிடம் உதவியாளராக இருந்தவர், நல்ல முத்துக்குமார் (வயது 23) சென்னையை அடுத்த செங்குன்றம் காந்தி நகர், கருமாரி அம்மன் தெருவில் வசிக்கும் இவருடைய தாயார் சுடலை வடிவு, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் ஒரு புகார் கொடுத்தார். "நடிகை அசினிடம் உதவியாளராக வேலை பார்த்த என் மகன் முத்துக்குமாரை கடந்த ஒரு மாதமாக காணவில்லை. நடிகை அசின், அவருடைய தந்தை ஜோசப் ஆகிய இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, என் மகனை மீட்டுத்தர வேண்டும்'' என்று அந்த புகாரில், சுடலை வடிவு கூறியிருந்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்தும்படி, செங்குன்றம் போலீசாருக்கு புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவிட்டார். அதன்படி அசினிடமும், அவருடைய தந்தை ஜோசப்பிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து அசினிடம் விசாரித்தபோது, ""முத்துக்குமாரால் இப்படி ஒரு பிரச்னை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களிடம் நல்லபடியாக இருந்துவிட்டு, அவரே ஊரில் கடை வைக்கப்போவதாக கூறிச் சென்றார். எங்களிடமிருந்து வேலையை விட்டு சென்ற முத்துக்குமார் சொந்த ஊருக்கு செல்லவில்லை என்று அவரது அம்மா சொல்லித் தான் எங்களுக்கு தெரிந்தது."முத்துக்குமார், வீட்டாரிடம் சொல்லாமல் எங்கு சென்றார் என்பதும் தெரியாது. நான், "நைன்டீன்த் ஸ்டெப்' படத்தில் நடித்து வருகிறேன். "லண்டன் ட்ரீம்ஸ்' படத்தின் பெரும்பகுதி முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் பாக்கி உள்ளன. இந்திப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ஹாலிவுட் படத்திலும் பேச்சுவார்த்தை நடக்கிறது,'' என்றார். "நான் `போக்கிரி' படத்தில் நடித்தபோது, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் முத்துக்குமார் வேலை செய்து வந்தான். அவன், என்னுடைய தீவிர ரசிகர் என்றும், என்னிடம் வேலை செய்ய விரும்புவதாகவும் கூறினான். என் அப்பா, அவனை வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொண்டார். அவனுக்கு படப்பிடிப்பை பார்க்க வேண்டும் என்று ஆர்வம். என்னுடன் அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு வருவான். எனக்கு மதிய சாப்பாடு அவன்தான் கொண்டு வருவான். என் தந்தை, அவனை சொந்த மகன் மாதிரி பார்த்துக்கொண்டார். எனக்கு இந்தி பட வாய்ப்பு வந்ததும், மும்பைக்கு புறப்பட்டோம். அப்போது, ``எனக்கு வேறு வேலை கிடைக்காது. நானும் உங்களுடன் வந்து விடுகிறேன்'' என்று முத்துக்குமார் கெஞ்சி கேட்டான். அய்யோ பாவம், என்று அவனையும் மும்பைக்கு அழைத்து வந்தோம். அவனுக்கு தனியாக தங்கும் இடம் எடுத்துக்கொடுத்து, செல்போனும் வாங்கிக் கொடுத்தோம். சம்பளத்துடன், தங்கும் இடத்துக்கான வாடகை, செல்போன் செலவுகளையும் அப்பாவே ஏற்றுக்கொண்டார். என்னுடன் படப்பிடிப்புக்கு வருவதால், அவனுக்கு தினசரி `பேட்டா' கிடைத்தது. முத்துக்குமாருக்கு சம்பளத்தையும் சேர்த்து மாதம் ரூ.25 ஆயிரம் கிடைக்கும். நான் சென்னையில் இருந்தபோதே, அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தேன். அவன் மும்பைக்கு வரும்போது, மோட்டார் சைக்கிளையும் கொண்டுவந்து விட்டான். அந்த மோட்டார் சைக்கிளில் அவன் வெளியில் சென்றபோது, விபத்தில் சிக்கிக் கொண்டான். இரவு 10 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது. அந்த இரவோடு இரவாக போய் அப்பா அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவனுக்கு கால் எலும்பு முறிந்துவிட்டதாகவும், மூன்று ஆபரேஷன்கள் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். எல்லா செலவுகளையும் அப்பாவே ஏற்றுக்கொண்டார். ஆஸ்பத்திரி செலவு மட்டும் ரூ.3 லட்சம் ஆனது. முத்துக்குமாரின் அம்மாவை மும்பைக்கு வரவழைத்து, அவருக்கான செலவையும் நாங்களே ஏற்றுக்கொண்டோம். இந்த நிலையில் நான், `லண்டன் ட்ரீம்' படப்பிடிப்புக்காக வெளிநாடு போய்விட்டேன். மீண்டும் நான் மும்பை திரும்பியபோது, முத்துக்குமாருக்கு கால் சரியாகி விட்டது. கொஞ்ச நாட்கள் அவனை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி டாக்டர்கள் கூறியிருந்தார்கள். ஓய்வுக்குப்பின் அவன் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தபோது, பரிதாபப்பட்டு சம்பள உயர்வு கொடுத்தோம். சில நாட்கள் கழித்து, சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் கேண்டீன் நடத்தும் வாய்ப்பு வந்திருப்பதாக, எனது அப்பாவிடம் முத்துக்குமார் கூறினான். அவன் ஆசைக்கு குறுக்கே நிற்க வேண்டாம் என்று அப்பாவும், அவனுடைய சம்பளத்தை `செட்டில்' செய்து அனுப்பி வைத்தார். எங்கள் வீட்டில் இருந்து சந்தோஷமாக புறப்பட்டு போனான். மும்பையில் ஒரு சட்டம் இருக்கிறது. யாரையாவது வேலைக்கு சேர்த்தாலோ, அல்லது வேலையை விட்டு அனுப்பினாலோ, அதுபற்றி பக்கத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அதன்படி, முத்துக்குமார் வேலையை விட்டு போனபோது, போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தோம். பின்னர் நான் படப்பிடிப்புக்காக காஷ்மீர் போய்விட்டேன். அந்த சமயத்தில், முத்துக்குமாரின் அம்மா, மும்பையில் உள்ள எங்க வீட்டுக்கு வந்து இருக்கிறார். அவரிடம், ``உன் மகன் வேலையை விட்டு போய்விட்டான்'' என்று அப்பா சொல்லியிருக்கிறார். உடனே அந்த அம்மா சென்னைக்கு திரும்பி விட்டார். இந்த நிலையில், முத்துக்குமார் எனக்கு போன் செய்து, ``உடனடியாக ரூ.15 லட்சம் வேண்டும். கொடுக்காவிட்டால், நடப்பதே வேறு'' என்று மிரட்டினான். ``நீ எங்கே இருந்து பேசுகிறாய்?'' என்று கேட்டதற்கு, சிவசேனா அலுவலகத்தில் இருந்து பேசுவதாக சொன்னான்.நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை. சின்னப்பையன் என்று விட்டு விட்டோம். முத்துக்குமார், ஒரு செலவாளி. அவன் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பாதித்தாலும், பத்து பைசா கூட சேமித்து வைக்கவில்லை. நண்பர்களிடம் கடன் வாங்குவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது. ஊரிலும் அவனுக்கு கடன் இருப்பதாக கேள்விப்பட்டோம்.அந்த கடன்களை அடைப்பதற்காகத்தான், எங்களை மிரட்டி இருக்கிறான். அவன் இருக்கும் இடம், அவனுடைய அம்மாவுக்கும் தெரியும். இரண்டு பேரும் சேர்ந்து, பணத்துக்காக நாடகம் நடத்துகிறார்கள்.'' இவ்வாறு அசின் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |