"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

திடீர் பரபரப்பை ஏற்படுத்திய தே.மு.தி.க.,வின் டில்லி பயணம்




புதுடெல்லி, மார்ச்.20-

தே.மு.தி.க., நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் ஆகியோரின் நேற்றைய திடீர் டில்லி பயணம், தமிழகத்தின் இருபெரும் கூட்டணிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி பக்கம் விஜயகாந்த் சாய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் தே.மு.தி.க., எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காமல் இருப்பதால், அந்தக் கட்சி எந்தப் பக்கம் போகப்போகிறது என்பது குறித்து தினந்தோறும் மாறி மாறி செய்திகள் வருகின்றன.

"பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்த் நாளை அறிவிப்பு வெளியிடுவார்'' என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், விடுதலை சிறுத்தைகளும்; அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் இடம் பிடித்துள்ளன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகின்றன.

பா.ம.க. தி.மு.க.வுடனும் கூட்டணி, அ.தி.மு.க.வுடனும் கூட்டணி என்ற பேச்சு தான் தினமும் வருகிறதே தவிர இதுவரை இறுதி முடிவும் எதுவும் எடுக்கவில்லை. தே.மு.தி.க. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ளப்போகிறது என்ற பேச்சு அடிபட்டு வந்தது.

தமிழக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இவர்களில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், டி.சுதர்சனம் மட்டும் சென்னை திரும்பினர்.

இந்த நிலையில், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்தின் மைத்துனரும், இளைஞர் அணி செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஆகியோர் நேற்று காலை 10.15 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். டெல்லியில் குலாம் நபிஆசாத், அகமது பட்டேல் ஆகிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து இவர்கள் பேச உள்ளனர். அப்போது, தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை இடங்கள் கொடுப்பது, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, டெல்லி பயணம் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன், எல்.கே.சுதீஷ் ஆகியோரிடம் நிருபர்கள் கேட்டபோது பதில் அளிக்க மறுத்து விட்டனர். மேலும், டெல்லிக்கு சென்று நாளை (இன்று) திரும்பி விடுவோம். அதன் பிறகு பதில் அளிக்கிறோம்' என்று பதில் அளித்தனர்.

டெல்லியில் தங்கி இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று நிருபர்கள் சந்தித்து, "தமிழ்நாட்டில் எந்த கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கப்போகிறது'' என்று கேள்வி விடுத்தனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை'' என்று கூறினார்.

"காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி பற்றி பேசி வருவதால், வரும் 21-ந் தேதி அன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்'' என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று இரவு டெல்லியில் தங்கியிருக்கும் தே.மு.தி.க. தலைவர்கள் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியபின் சென்னை திரும்புவார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றன.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections