ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை ![]() சென்னை, மார்ச்.20- கொலை வழக்கில் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உட்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. வேதாரண்யம் அருகில் உள்ள தேத்தாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. தனது கணவர் சாந்தகுமார் கடத்தப்பட்டதாக வேளச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். கொடைக்கானல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல், சாந்தகுமாரின் உடல் என தெரியவந்தது. கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்தது. கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ள ராஜகோபால் விரும்பியதாகவும், அதனால் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கை பூந்தமல்லி செஷன்ஸ் கோர்ட் விசாரித்தது. ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. டேனியல் என்பவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம், கார்மேகம், ஜாஹிர் உசேன், காசி விஸ்வநாதனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், பட்டுராஜன் என்பவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஒன்பது பேரும் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர். தண்டனையை அதிகரிக்கக் கோரி அரசுத் தரப்பிலும் மனு செய்யப்பட்டது. மனுக்களை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. போலீஸ் தரப்பில் அரசு குற்றவியல் வக்கீல் ராஜ இளங்கோ வாதாடினார். புலன் விசாரணையில் உள்ள சிறு சிறு தவறுகளுக்காக, ஒட்டுமொத்த குறைபாடு இருப்பதாகக் கூற முடியாது. புலன் விசாரணையில் ஏற்பட்ட தவறால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா என்கிற முக்கியமான கேள்வியைத் தான் பார்க்க வேண்டும். புலனாய்வு அதிகாரியின் ஒவ்வொரு செயலையும் அல்லது செய்யாமல் விட்டதையும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக எடுக்க வேண்டிய தேவையில்லை. ஜீவஜோதியின் வாக்குமூலத்தை, அவரது தாயார் அளித்த வாக்குமூலம் உறுதி செய்கிறது. சம்பவ இடத்திற்கு அருகில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரம் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் மூலம், ராஜகோபாலின் உத்தரவின்படி தான் சாந்தகுமார் கொல்லப்பட்டுள்ளார் என்கிற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இந்தக் கொலை செய்தனர் என்பதை முடிவு செய்வதற்கு, தடய அறிவியல் அறிவு இருக்க வேண்டும் என தேவையில்லை. யார் மரணத்தை விளைவித்தார் என்பதை நிரூபிக்க குறிப்பிட்ட ஆதாரம் எதுவும் இல்லை. இருந்தாலும், மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இருந்தது தெரிகிறது. இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாஹிர் உசேன், காசி விஸ்வநாதன், பட்டுராஜன் ஆகியோருக்கு கொலைக் குற்றத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. ராஜகோபாலுக்கு செஷன்ஸ் கோர்ட் இந்த அளவுக்கு அபராதத் தொகை விதித்ததில் எந்த நியாயமும் இல்லை. அபராத தொகை 55 லட்சம், 30 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. ஜீவஜோதிக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தண்டனை விதிக்கப்பட்டவர்களை சிறைக்கு கொண்டு செல்ல செஷன்ஸ் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள தேத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவ ஜோதி. கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் மற்றும் தாயாருடன் அவர்சென்னையில் வசித்து வந்தார். ஓட்டல் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியை 3-வது மனைவியாக திருமணம் செய்ய விரும்பினார். இந்த சூழ்நிலையில், பிரின்ஸ் சாந்தகுமாரின் பிணம் கொடைக்கானல் பகுதியில் உள்ள பெருமாள்மலை அடிவாரத்தில் 31.10.2001 அன்று கிடந்தது. இந்த பிணத்தை மீட்டு கொடைக்கானல் நகராட்சி சுடுகாட்டில் 1.11.2001 புதைக்கப்பட்டது. விசாரணையில், அது ஜீவஜோதியின் கணவருடைய பிணம் என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஓட்டல் அதிபர் ராஜகோபால் தூண்டுதல்பேரில், பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்து, பின்னர் கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 9 பேர் மீது பூந்தமல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 26.4.2004 அன்று அக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. உள் நோக்கத்துடன் இந்த கொலை நடக்கவில்லை என்று கூறி, ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதுதவிர, டேனியலுக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கார்மேகம், ஜாகீர்உசேன், காசிவிஸ்வநாதன் ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பட்டுராஜனுக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த அபராத தொகையில் ரூ.50 லட்சத்தை கணவரை இழந்த ஜீவஜோதிக்கு வழங்க வேண்டும் என்று செசன்சு கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இந்த தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று ராஜகோபால் உள்பட 9 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். புலன்விசாரணையில் குறைபாடுகள் உள்ளன என்றும், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியத்தை வைத்து தண்டனை வழங்கியது தவறு என்றும் மனுவில் கூறியிருந்தனர். சென்னை வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைவு என்றும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அப்பீல் செய்தார். சதிதிட்டம் தீட்டி உள்நோக்கத்துடன் கொலை செய்யப்பட்டிருப்பதால், இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று அந்த அப்பீல் மனுவில் இன்ஸ்பெக்டர் கூறியிருந்தார். நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் இந்த அப்பீல் வழக்குகளை விசாரித்தனர். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை ஏற்று, ஓட்டல் அதிபர் ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர்உசேன், காசிவிஸ்வநாதன், பட்டுராஜன் ஆகிய 6 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றி அமைத்து, இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளித்தனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |