"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சென்னையில் வக்கீல்கள் இன்று பேரணி




சென்னை, மார்ச்.19-

சென்னை ஐகோர்ட்டில் நடந்த தடியடி சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல்கள் சங்கத்தினர் இன்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் வட சென்னை இணைக் கமிஷனராக இருந்த ராமசுப்ரமணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் நீதிபதி முகோபாதயா உத்தரவிட்டார். இதையடுத்து, வக்கீல்கள் இன்று நடப்பதாக அறிவித்த கண்டனப் பேரணியை, வெற்றிப் பேரணியாக நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னையில் பேரணி வழித்தடம் முழுவதையும் வீடியோ எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ள வக்கீல்கள் பேரணிக்கு போலீசார் 12 நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீதான தடியடி சம்பவத்தின் போது பணியில் இருந்த கூடுதல் கமிஷனர் மற்றும் இணை கமிஷனரை சஸ்பெண்ட் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி வக்கீல்கள் & போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வக்கீல்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யா, தனபாலன், கே.சந்துரு ஆகியோர் நேற்று அளித்த இடைக்கால உத்தரவின் விபரம்:

உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களை, போலீசார் தாக்கிய சம்பவம் நடந்தவுடன், தற்காலிக தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் தாமாகவே முன்வந்து, போலீசாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

தற்காலிக தலைமை நீதிபதி அனுமதியில்லாமல், நீதிமன்றத்துக்குள் நுழைந்து தடியடி நடத்த யார் அதிகாரம் கொடுத்தது, தடியடி நடத்த யார் உத்தரவிட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. 3 முறை இந்த வழக்கை விசாரித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தோம்.

இதற்கிடையே, இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து, நீதிபதி கிருஷ்ணா தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்தது. சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய நீதிபதி கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கை தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உயர் நீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அதன்படி நாங்கள் வழக்கை விசாரிக்க தொடங்கினோம். நாங்கள் பலமுறை உத்தரவிட்டும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருந்தும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, இதில் இடைக்கால உத்தரவு தேவை என்று கருதினோம். யார் உத்தரவின் பேரில் நீதிமன்றத்தில் நுழைந்தீர்கள், யாரைக் கேட்டு வக்கீல்களை கைது செய்ய வந்தீர்கள், யார் தடியடி நடத்த உத்தரவு போட்டது, எந்தெந்த அதிகாரிகள் சம்பவத்தன்று நீதிமன்றத்தில் இருந்தார்கள் என்ற விபரங்களையும், அவர்களின் பெயர், பதவி விபரங்கள் அடங்கிய பட்டியலையும் தாக்கல் செய்து, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தோம். ஆனால், இன்றுதான் போலீஸ் கமிஷனர் சார்பாக தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘மாலை 4 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் கல் எறியும் சம்பவம் நடந்தது. கார், பைக்குகள் அடித்து சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் படுகாயம் ஏற்பட்டது. தலைமைக் காவலர் கிருஷ்ணகுமாரின் உயிர்நாடியில் கல்பட்டதால், அவர் தரையில் சுருண்டு விழுந்து விட்டார்.

எனவே போலீசார் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலிருந்த கூடுதல் கமிஷனர் விஸ்வநாதனிடம், 2 இணை கமிஷனர்களும், 4 துணை கமிஷனர்களும் அவசர ஆலோசனை நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோதமான கும்பல் கூடியிருப்பதாக கருதி, அவர்கள் மீது குறைந்தபட்ச வேகத்தை பயன்படுத்தி தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர்’ என்று மனுவில் கூறி உள்ளார்.

அதே மனுவில், அட்வகேட் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், ‘போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் எழுப்பிய கோரிக்கையில் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி கிருஷ்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு மவுனமே பதிலாக இருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டது’ என்று கூறியிருந்தார்.

ஆனால், சம்பவத்தன்று நீதிமன்றத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும், ஆயுதம் தாங்கிய போலீசார் மீதும், தற்காலிக தலைமை நீதிபதியிடம் அனுமதி பெறாமல் நுழைந்தவர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படவில்லை.

தடியடி நடத்துவதற்கு முன்பு அப்போதைய தற்காலிக தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்றுள்ளனரா என்பதற்கு எந்த ஆதாரமும், ஆவணங்களையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருப்பதாக கருதுகிறோம்.

அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க ஏதுவாக இருக்கும் வகையில், சம்பவத்தன்று உயர் நீதிமன்றத்தில் இருந்த சட்டம், ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அப்போதைய இணை கமிஷனர் (வடக்கு) எம்.ராமசுப்பிரமணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடுகிறோம்.

ஏனெனில் இவர்கள் மேற்பார்வையில்தான் இந்த சம்பவத்தை நடத்தி உள்ளனர். இதில் அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு 2 வாரத்துக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.

ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்தையொட்டி, சென்னையில் இன்று வக்கீல்கள் மாபெரும் பேரணி நடத்துகிறார்கள். காலை 11 மணியளவில் மன்றோ சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைகிறது.

அதன்பின் அங்கு வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் பேசுகிறார்கள். இதற்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வக்கீல்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பேரணி காட்சிகளை வழிநெடுக 100 இடங்களில் வீடியோ கேமராக்கள் மூலம் படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளனர். வழியில் உள்ள சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. வழிநெடுக உள்ள மாடி கட்டிடங்களில் நின்றும் வீடியோ படம் பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த பேரணிக்கு போலீசார் 12 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். பேரணியில் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. பேரணியில் வருபவர்கள் அரசுக்கு எதிராகவோ, சாதி, மத அடிப்படையிலோ கோஷங்கள் எழுப்பக்கூடாது. கம்புகளில் கட்டப்பட்ட கொடிகளை கையில் ஏந்தி வரக்கூடாது. வன்முறையில் ஈடுபடக்கூடாது. வன்முறையை தூண்டும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஊர்வலம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வக்கீல்கள் ஊர்வலத்துக்கு வழிநெடுக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு இருக்கும். ஆனால் ஊர்வலத்தோடு போலீசார் பாதுகாப்பாக நடந்து வரமாட்டார்கள். வக்கீல்கள் மத்தியில் துண்டு பிரசுரம் ஒன்று விநியோகித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த துண்டு பிரசுரத்தில், `வக்கீல்கள் கம்புகளில் கட்டப்பட்ட கறுப்பு கொடியோடு வரவேண்டும். ஹெல்மெட் அணிந்து வரவேண்டும், பெண் வக்கீல்கள் கை பைகளோடு வரவேண்டும்' என்றெல்லாம் துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான் பேரணி காட்சிகளை வீடியோ படம் எடுக்க முடிவு செய்தோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections