பா.ம.க. இடம் பெறும் அணியில் சேரக்கூடாது!. விஜயகாந்த் முன்னிலையில் தொண்டர்கள் போர்க்கொடி!.கட்சி அலுவலகத்தில் பரபரப்பு!. ![]() சென்னை, மார்ச்.18- பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் சேரக்கூடாது என்று தே.மு.தி.க தொண்டர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் போர்க்கொடி தூக்கினர். கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க.வையும், தே.மு.தி.க.வையும் சேர்க்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. பா.ம.க. தங்கள் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் சேரலாமா? என்று தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இது குறித்து இதுவரை எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் சோழகொட்டவாய் பகுதியில் பா.ம.க. தொண்டர்களுக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் தே.மு.தி.க.வினர் 45 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் வந்துள்ள அவர்கள் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நேற்று தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வரவேற்று பொன்னாடை அணிவித்தார். பின்னர் விஜயகாந்த், அவர்களிடம் தொகுதி நிலவரம் குறித்தும், யாருடன் கூட்டணி வைத்தால் நல்லது என்றும் கேட்டார். அதற்கு அவர்கள், "பா.ம.க.வினரால் தொண்டர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அதனால் பா.ம.க. இடம் பெறும் அணிக்கு நாம் போக கூடாது. அவர்களுடன் கூட்டணி சேர்வதை நாங்கள் விரும்பவில்லை'' என்று ஆவேசமாக கூறினர். இதை தொடர்ந்து அவர்களை அமைதிப்படுத்திய விஜயகாந்த், "கூட்டணி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், தொண்டர்களின் முடிவுப்படி தான் எந்த முடிவும் எடுக்கப்படும்'' என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து தொண்டர்கள் அமைதியானார்கள். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கிடையே அரவாணிகள் சிலர் நேற்று தே.மு.தி.க. அலுவலகம் வந்தனர். அவர்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். அவர்களை விஜயகாந்த் வாழ்த்தி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிரசாரம் மேற்கொள்வது குறித்து அரவாணிகள் கூறும்போது, "பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது என்று ஏற்கனவே நாங்கள் முடிவு செய்திருந்தோம். அதன்படி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறோம்'' என்றனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |