அ.தி.மு.க.வில் உரிய மரியாதை இல்லை!. விரைவில் தி.மு.க.வில் இணைவேன் கருணாநிதியை சந்தித்த பின் நடிகர் ராதாரவி பேட்டி!. ![]() சென்னை, மார்ச்.17- அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இருப்பதாகவும், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தப்பின் நடிகர் ராதாரவி கூறினார். நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி நேற்று மாலை 5 மணியளவில் முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1/2 மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு;- கேள்வி:- முதல்-அமைச்சர் கருணாநிதியை திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்களே? பதில்:- முதல்-அமைச்சர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது வந்து நலம் விசாரித்தேன். என்னுடைய தாயார் மறைந்த போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட என்னை போனில் தொடர்பு கொண்டு தூக்கம் விசாரித்த மனிதாபிமானம் மிக்கவர் அவர். அந்த அடிப்படையில் அவரை இன்று சந்தித்தேன். கேள்வி:- முதல்-அமைச்சர் கருணாநிதியுடனான உங்கள் சந்திப்பை தி.மு.க.வில் இணைவதற்கான முன்னோட்டம் என்று எடுத்துக்கொள்ளலாமா? பதில்:- ஆமாம். அப்படி எடுத்துக்கொள்ளலாம். கேள்வி:- அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று விலகுவதற்கு என்ன காரணம்? பதில்:- கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது சிறு இரங்கல் கூட ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள். இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்து இருக்கிறேன். கேள்வி:- அ.தி.மு.க.வில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்களா? பதில்:- தொண்டர்கள் கொடுத்தார்கள். தலைமை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லை. கேள்வி:- உங்களை போன்று வேறுயாரெல்லாம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வர இருக்கிறார்கள்? பதில்:- அ.தி.மு.க.வில் தகுதியானவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இன்னும் நிறைய பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவார்கள். கேள்வி:- தி.மு.க.வில் எப்போது இணைவீர்கள்? பதில்:- விரைவில் கேள்வி:- பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவீர்களா? பதில்:- நான் அ.தி.மு.க.வில் சேரும் போதே பதவியை எதிர்பார்த்து சேரவில்லை. இங்கேயும் அப்படி தான். கேள்வி:- தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? பதில்:- கண்டிப்பாக செய்வேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |