இலங்கை தமிழர் நலனுக்காக அ.தி.மு.க. சார்பில் ரூ.2 கோடி நிதி செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு ஜெயலலிதா வழங்கினார்!. ![]() சென்னை, மார்ச்.17- இலங்கை தமிழர் நலனுக்காக அ.தி.மு.க. சார்பில் உண்டியல் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.2 கோடியே 11 லட்சம் நிதியை செஞ்சிலுவை சங்கத்திடம் ஜெயலலிதா வழங்கினார். இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் கடந்த 9-ந் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அப்போது, இலங்கை தமிழர்கள் நலனுக்காக நிதி வசூல் செய்யப்பட்டது. அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், கட்சியின் பொது செயலாளர் என்ற முறையில் ரூ.1 கோடியும் வழங்கினார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவும் தனது பங்கிற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். உண்ணாவிரதத்தின்போது நிதி வசூல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.2 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 391 ரூபாய் 50 காசு ஆகும். இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட இந்த நிதி வங்கியில் டி.டி. ஆக எடுக்கப்பட்டது. அந்த தொகையை அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல குழுத் தலைவர் பிரான்சுவா ஸ்டாமிடம் நேற்று வழங்கினார். அப்போது, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திர ஓபாராய், அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். நிதியை பெற்றுக்கொண்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல குழுத் தலைவர் பிரான்சுவா ஸ்டாம் நிருபர்களிடம் கூறுகையில், "இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ள வன்னி பகுதியில், தற்போது செஞ்சிலுவை சங்கம் மட்டும் தான் உள்ளது. மற்ற தொண்டு நிறுவனங்கள் எதுவும் அங்கு இல்லை. அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டுள்ள இந்த நிதி, பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்காக அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார். பின்னர் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி அல்லாத அணிக்கு 3-வது அணி என்று பத்திரிகையாளராகிய நீங்கள் பெயர் வைத்துள்ளீர்கள். ஆனால், அந்த அணியினர் மாற்று அணி என்று கூறி வருகிறார்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி, 3-வது அணியை 3-வது கண் என்று வர்ணித்துள்ளார். நான் அதற்கு பதில் அளிக்க விரும்புகின்றேன். 3-வது கண் என்பது சிவபெருமானின் நெற்றிக்கண்ணை குறிக்கும். நெற்றிக்கண் மூடியிருக்கும் வரை தான் தவறு செய்பவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். நெற்றிக்கண் திறந்தால் எரிந்து சாம்பலாகி போவார்கள். இவ்வாறு ஜெயலலிதா கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |