படம் வெற்றி அடைந்தால் சம்பளத்தை உயர்த்துகிற நடிகர்கள், தோல்வி அடைந்தால் குறைக்க வேண்டும்'' சினிமா பட விழாவில், `கலைப்புலி' ஜி.சேகரன் பேச்சு ![]() சென்னை,மார்ச்.17- திருச்சியை சேர்ந்த காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராம், "பிரம்மதேவா" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடிகளாக தேஜாஸ்ரீயும், முமைத்கானும் நடித்துள்ளனர். தர்மலிங்கா டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நேற்று நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன் ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டார்கள். டைரக்டர் கே.வசந்த் பெற்றுக்கொண்டார். விழாவில், "கலைப்புலி" ஜி.சேகரன் பேசியதாவது:- "ஒரு படம் வெற்றிபெற்றால், அதன் பலன் தயாரிப்பாளரை விட, அந்த படத்தின் கதாநாயகன், டைரக்டர் ஆகிய இருவருக்குத்தான் அதிகமாக கிடைக்கிறது. படம் தோல்வி அடைந்தால், அதன் பாதிப்பு தயாரிப்பாளர் ஒருவரையே சேருகிறது. கதாநாயகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் பணிபுரிகிற உதவி டைரக்டர்கள், காமிரா உதவியாளர்கள் போன்றவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். தராசு நியாயமாக இல்லை. ஏற்றத்தாழ்வு இருக்கிறது. சமீபத்தில், கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட ஒரு படம் திரைக்கு வந்தது. படம் சரியாக போகவில்லை. அந்த படத்தின் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தார்கள். ஆனால் அந்த படத்தின் கதாநாயகன் ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். படம் வெற்றிபெற்றால் சம்பளத்தை உயர்த்துகிற கதாநாயகர்கள், படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. இது என்ன நியாயம்? ஒரு கதாநாயகனுக்கு ஒரு படம் வெற்றிபெற்றால், உடனே ரூ.1 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். அதேபோல் தோல்வி அடைந்தால், சம்பளத்தை குறைக்க வேண்டும். படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளர்-டைரக்டர்-கதாநாயகன் ஆகிய மூன்று பேருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். அதை மனதில் வைத்துக்கொண்டு, அந்த கதாநாயகன் பெரிய அளவில் உயர்ந்த பிறகு, தயாரிப்பாளருக்கு உதவி செய்வதில்லை. கதாநாயகர்கள் அனுசரித்துப் போனால், தயாரிப்பாளர்களின் கஷ்டங்கள் குறையும். ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிற கதாநாயகன், படம் ரிலீசின்போது அதில் பாதி சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொள்ள வேண்டும். படம் ரிலீசாகி வெற்றிபெற்றால், மீதி பணத்தை வாங்கிக் கொள்ளலாம்.'' இவ்வாறு `கலைப்புலி' ஜி.சேகரன் பேசினார். விழாவில் பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், கே.எஸ்.சீனிவாசன், நடிகைகள் மோனிகா, கீர்த்தி சாவ்லா, ஒளிப்பதிவாளர்-டைரக்டர் ரவீந்தர், மற்றும் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |