"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

பாகிஸ்தான் அரசியல் குழப்பம் மேலும் தீவிரம்




இஸ்லாமாபாத், மார்ச்.16-

பாகிஸ்தான் பார்லிமென்ட் முன், இன்று நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் நேற்று இஸ்லாமாபாத் நோக்கி புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்.

அதேநேரத்தில், பஞ்சாப் மாகாண உயர் போலீஸ் அதிகாரியும், உயர் அதிகாரிகள் சிலரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களும் நவாஸ் ஷெரீபுடன் பேரணியில் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், நவாஸ் ஷெரீபின் தம்பி தம்பியும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷபாசும், ராவல்பிண்டியில் உள்ள பாக்., முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சித் தலைவர் வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டார்.

வீட்டுக் காவலில் வைக்கும்படி பாகிஸ்தான் அரசு பிறப்பித்த உத்தரவு வந்து சேரும் முன்னரே அவர் தப்பி விட்டார். இன்றைய முற்றுகைப் போராட்டத்தின் போது அவர் வெளியே வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் அரசியல் குழப்பம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

முஷாரப் அதிபராக இருந்த போது, பதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உட்பட அனைத்து நீதிபதிகளையும் மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும். பஞ்சாப் மாகாண கவர்னரை நீக்க வேண்டும். அங்கு, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷபாசை மீண்டும் முதல்வராக பதவியில் அமர்த்த வேண்டுமென, எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று, இஸ்லாமாபாத்தில் பார்லிமென்ட் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளன. இதனால், நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் உட்பட எதிர்க்கட்சிகளின் தொண்டர்களும், வக்கீல்களும் பேரணியாக இஸ்லாமாபாத் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களை இஸ்லாமாபாத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது. தலைநகருக்கு வரும் சாலைகள் அனைத்தும் "சீல்' வைக்கப்பட்டதோடு, கன்டெய்னர்களைக் கொண்டு தடுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க ராணுவமும் உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், நவாஸ் ஷெரீபையும், அவரின் தம்பி ஷபாசையும் வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

ஆனால், அதற்குள் நவாஸ் ஷெரீப் வெளியேறி விட்டார். இஸ்லாமாபாத்தில் இன்று நடக்கும் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் அவர் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.முன்னதாக நேற்று காலை தன் வீட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஷெரீப் கூறியதாவது:அரசு விதித்துள்ள தடைகளைக் கண்டு மக்கள் பயப்படக்கூடாது. வக்கீல்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள நீண்ட பேரணியில் பங்கேற்க வேண்டும். இஸ்லாமாபாத்தில் நடக்கும் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அரசின் தடைகள் எல்லாம் தற்காலிகமானவையே. அவற்றை தகர்த்தெறிந்து நாம் இஸ்லாபாமாத் சென்றடைவோம். என்னை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்ட நவாஸ் ஷெரீப், "புயல் புறப்பட்டு விட்டது. அதை நிறுத்த முடியாது' என்றார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீசும், மற்ற சில உயர் அதிகாரிகளும் நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். நவாஸ் ஷெரீபுடன் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

நவாஸ் ஷெரீப் சகோதரர்களை மட்டுமின்றி, ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் குவாசி உசேன் அகமது மற்றும் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஆகியோரையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர்களும் தலைமறைவாகி விட்டனர். இஸ்லாமாபாத்தில் உள்ள இம்ரான் கான் வீட்டில் நேற்று சோதனை நடத்திய போலீசார், அவர் இல்லை என்று தெரிந்ததும், வீட்டைப் பூட்டி "சீல்' வைத்தனர்.இதற்கிடையில், இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாகச் செல்வதற்காக, ராவல்பிண்டியில் உள்ள ஐகோர்ட் வளாகத்தில் நேற்று ஏராளமானவர்கள் குவிந்தனர். அங்கு சோதனை நடத்திய போலீசார், 100க்கும் மேற்பட்ட வக்கீல்களை கைது செய்தனர். வக்கீல்களை அடித்து வெளியேற்றிய அவர்கள், ஐகோர்ட் கட்டடத்தின் பிரதான வாயிலையும் மூடினர்.

தலைநகரில் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேற்று ரோந்து சுற்றியதோடு, முக்கியமான கட்டடங்களில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.கராச்சி உட்பட வேறு பல பகுதிகளிலும் போலீசாருக்கும், எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பேரணியை தடுப்பதற்காக கடந்த செவ்வாய் கிழமைக்குப் பின், இதுவரை 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மாலிக் கூறுகையில், "பாதுகாப்பு காரணங்கள் கருதி, இன்று பார்லிமென்ட் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது. போராட்டத்தின் போது தற்கொலை படைத் தாக்குதல் உட்பட குண்டு வெடிப்புகள் நிகழ வாய்ப்பு உள்ளது. ஷெரீப் சகோதரர்களை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்படவில்லை' என்றார்.

கடைசித்தகவல்

இத்தகைய பதட்டமான சூழ்நிலையில் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலாணி, ராணுவ தளபதி கியானி ஆகியோர் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி வழங்கிட அதிபர் சர்தாரி அவசர சட்டம் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதி இப்திகார் சவுத்திரிக்கு மீண்டும் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நவாஸ் ஷெரீப்பும் இப்பேரணியில் கலந்து கொள்ள இஸ்லாமாபாத் விரைந்துள்ளார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections