"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"மூன்றாவது அணிக்கு நாங்கள் 48 மணி நேரம் கெடு விதித்ததாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை" - பகுஜன் சமாஜ் கட்சி




புதுடில்லி, மார்ச்.16-

மாயாவதியை பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்க, மூன்றாவது அணிக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை பகுஜன் சமாஜ் கட்சி மறுத்துள்ளது.இதுதொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர சர்மா மேலும் கூறுகையில், "மூன்றாவது அணிக்கு நாங்கள் 48 மணி நேரம் கெடு விதித்ததாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை; தவறானவை. அதுபோன்ற கெடு எதையும் யாரும் நிர்ணயிக்கவில்லை. இதற்கு எங்கள் கட்சி சார்பில் பலமான கண்டனம் தெரிவிக்கிறோம். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் செய்த சதியே இதுபோன்ற செய்தி வெளியாகக் காரணம். மூன்றாவது அணித் தலைவர்கள் பிரதமர் பதவி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. தேர்தலுக்குப் பின்னரே இந்தப் பிரச்னை குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

"லோக்சபா தேர்தலில், அனைத்து மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பின்னர் தான் முடிவு செய்யப்படும்,'' என, உ.பி., முதல்வர் மாயாவதி கூறினார்.

அவரின் இந்த மனம் திறந்த பேச்சால், மூன்றாவது அணியின் பிரதமர் பதவி வேட்பாளர் விவகாரத்தில், தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.எட்டு கட்சிகள் அடங்கிய மூன்றாவது அணி சமீபத்தில் துவக்கப்பட்டது. இந்த அணியின் தலைவர்களுக்கு உ.பி., முதல்வர் மாயாவதி நேற்று இரவு விருந்தளித்தார்.

டில்லியில் உ.பி., முதல்வர் மாயாவதி ஏற்பாடு செய்திருந்த விருந்தில், அ.தி.மு.க., சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.மூன்றாவது அணி சார்பில் டில்லியில் நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பிரகாஷ் கராத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., சார்பில் மைத்ரேயன் கலந்து கொண்டார்.இந்த கூட்டத்துக்கு பிறகு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உ.பி., முதல்வருமான மாயாவதி, தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்தார். ஆனால், இந்த விருந்தில் அ.தி.மு.க., கலந்து கொள்ளவில்லை. இது குறித்து மைத்ரேயனிடம் கேட்ட போது, "மூன்றாவது அணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள கட்சி மேலிடம் சார்பில் எனக்கு அறிவுறுத்தப்பட்டது, எனவே, நான் விருந்தில் கலந்து கொள்ளவில்லை' என்றார்.

இதற்கு முன்னதாக நிருபர்களிடம் பேசிய மாயாவதி கூறியதாவது:லோக்சபா தேர்தலில் எங்களின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காது. மூன்றாவது அணித் தலைவர்களுக்கு நான் அளிக்கும் விருந்துக் கூட்டத்தில், பிரதமர் பதவி வேட்பாளர் பிரச்னை பற்றி விவாதிக்கப்படாது

15வது லோக்சபா தேர்தலின் முடிவுகள் வெளியான பின்னரே இதுபற்றி விவாதிக்கப்படும்.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வரக்கூடிய தேர்தலில் மத்தியில் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான திட்டங்கள் குறித்து மூன்றாவது அணித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். எங்களின் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தேர்தலை தனியாகவே சந்திக்கும். தேர்தலுக்குப் பின், ஐ.மு.கூ., அல்லது தே.ஜ.கூ.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

இந்த இரு கூட்டணிகளும் ஆட்சியைப் பிடிக்காமல் தடுப்பது என, இடதுசாரிகளும் மற்ற சில கட்சிகளும் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றன. வரும் தேர்தலில், எங்களின் அந்த நோக்கம் நிறைவேறும் என, நம்புகிறோம். பகுஜன் சமாஜ் கட்சி நாடு முழுவதும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும்.இட ஒதுக்கீடு: அனைத்து மாநிலங்களிலும், மத்தியிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது எங்கள் கட்சி நிறுவனர் கன்ஷிராமின் இதயபூர்வமான விருப்பம். மத்தியில், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால், உயர் ஜாதியினருக்கு எங்கள் அரசு இட ஒதுக்கீடு வழங்கும்.மூன்றாவது அணி உதயமானதால், ஐ.மு.கூ., மற்றும் தே.ஜ.கூ., தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். அதனால் தான், மூன்றாவது அணிக்கு எதிராக ஆதாரமற்ற, அற்பத்தனமான வாதங்களை முன்வைக்கின்றனர்.

மத்தியில் ஆட்சியில் இருந்த தே.ஜ.கூ., அரசும், தற்போது ஆட்சியில் இருக்கும் ஐ.மு.கூ., அரசும் சாதாரண மக்கள் பலன்பெறும் வகையிலான பொருளாதார கொள்கைகளை உருவாக்கத் தவறி விட்டன. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்த அணிகள் அலட்சியம் காட்டியதால், பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து விட்டன.உ.பி., மாநிலத்திற்கான 80 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை திட்டத்தை அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். ஆனால், ஒரு பைசாவைக் கூட மத்திய அரசு தரவில்லை. தற்போதைய பொருளாதார கொள்கைகள் எல்லாம் முதலாளிகளுக்கு சாதகமாகவே உள்ளன.அரசுத் துறைகளையும், நிறுவனங்களையும் தனியார் துறைக்கு மாற்றுவதன் மூலம் படிப்படியாக இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர காங்கிரசும், பா.ஜ.,வும் முற்பட்டுள்ளன. அரசுத்துறைகள் தனியார் மயமாக்கப்பட்டாலும் கூட, உ.பி., மாநிலத்தில் எங்கள் அரசு இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது. "அரசியல் அதிகாரத்தின் முதன்மையான சாவியை ஒரு கட்சி பெற்ற பின்னரே, நாட்டில் மாற்றங்களை கொண்டுவர முடியும்' என, அம்பேத்கர் கூறியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்து உருவாக்கப்படும் பொருளாதார கொள்கைகள் மற்றும் வெளியுறவு கொள்கைகள் எல்லாம், நாட்டிற்கும் மற்றும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பலனளிப்பதாக இருக்கும்.

இவ்வாறு மாயாவதி கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections