"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஐகோர்ட் உத்தரவுக்கு வக்கீல்கள் பதில் நடவடிக்கை : வக்காலத்துகளை வாபஸ் பெற முடிவு




சென்னை, மார்ச்.15-

கோர்ட்டுக்கு வக்கீல்கள் வரவில்லை என்றால், தகுதி அடிப்படையில் வழக்குகளை விசாரிக்கலாம் என, ஐகோர்ட் பதிவுத் துறை அறிவிப்புக்கு வக்கீல்கள் தரப்பில் பதில் நடவடிக்கை துவங்கியுள்ளது. வக்காலத்து படிவங்களை வாபஸ் பெறுவதாகவும், வழக்குப் பட்டியலில் வக்கீல்களின் பெயர் வெளியிட வேண்டாம் எனவும் பதிவாளர் ஜெனரலிடம் மனு அளிக்கப்பட்டது.ஐகோர்ட் வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 25 நாட்களாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது.நாளை முதல் வழக்கு விசாரணையை நடத்தி, தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும் என அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் வெளியிட வேண்டும் என, அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும், ஐகோர்ட் பதிவுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.கிரிமினல் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பட்டியலில் உள்ள வக்கீல்களை ஆஜராகுமாறு கோரலாம். வக்கீல் வரவில்லை என்றால் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்குமாறு, மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.இதேபோல், ஐகோர்ட்டிலும் நாளை முதல் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில், வக்கீல்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.வக்கீல்கள் சங்கங்களின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின், பதிவாளர் ஜெனரல் மாலாவை, வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், சமூகநீதி பேரவை வக்கீல்கள் அமைப்பின் தலைவர் பாலு, முன்னாள் செயற்குழு உறுப்பினர் அப்துல் ரகுமான், முத்துராஜ் உள்ளிட்ட வக்கீல்கள் சந்தித்தனர்.பதிவாளர் ஜெனரலிடம் வக்கீல்கள் அளித்த மனுக்களில், "கடந்த மாதம் 19ம் தேதி நடந்த சம்பவத்தின் தொடர் நிகழ்வு மற்றும் சூழ்நிலை பற்றி எங்கள் கட்சிக்காரர்களிடம் தெரிவித்துள்ளோம். வழக்குகளில் ஆஜராக அளிக்கப்பட்ட வக்காலத்து படிவத்தை வாபஸ் பெற கட்சிக்காரர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

கோர்ட் வளாகத்தில் எங்களுக்கு பாதுகாப்பில்லை. வழக்கு பட்டியலில் எங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம். மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களது பெயர்களை வழக்குப் பட்டியலில் வெளியிட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறியதாவது: சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் பட்டியலில் உள்ள வக்கீல்கள் பலர், போலீசாரால் தாக்கப்பட்டனர். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, கோர்ட்டில் ஆஜராக மாட்டோம். ஐகோர்ட் வெளியிட்ட அறிவிப்பானது, எங்களை வேதனைப்படுத்துகிறது. இதை திரும்பப் பெற வேண்டும்.

எங்கள் போராட்டம் நியாயமானது, ஜனநாயக ரீதியானது.போராட்டத்தை நசுக்கிற வகையில், இந்த அறிவிப்பு உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே, வக்காலத்து படிவங்களை வாபஸ் பெற கட்சிக்காரர்களிடம் கூறியிருக்கிறோம். இதுகுறித்து பதிவாளர் ஜெனரலை சந்தித்து மனு அளித்துள்ளோம்.இவ்வாறு பிரபாகரன் கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections