"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

பிரதமர் வேட்பாளர் மாயாவதியா இல்லையா மூன்றாவது அணி இன்று முக்கிய ஆலோசனை




டில்லி, மார்ச்.8-

தேசிய அரசியலில் திடீர் தெம்பு பெற்றுள்ள மூன்றாவது அணியின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அளிக்கும் விருந்தில் பிரகாஷ் கராத், பரதன், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென்ற மாயாவதியின் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு டில்லியில் ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு தயார் ஆவதற்கு முன், முக்கிய கட்சியான பா.ஜ., வின் நிலைமை பரிதாபமாக போய்விட்டதால், காங்கிரஸ் தரப்பு சற்று நம்பிக்கையுடன் இருந்துவந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது அணி தலைவர்கள் ஏற்படுத்திய அடுத்தடுத்த திருப்பங்களால் காங்கிரஸ் சற்று ஆட்டம் கண்டுள்ளது. குறிப்பாக தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., வின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒரிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான, பிஜு பட்நாயக் திடீரென கூட்டணியில் இருந்து வெளியேறியது தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா பெங்களூரு அருகே மூன்றாவது அணி தலைவர்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான பேரணியை நடத்திக் காட்டினார். மூன்றாவது அணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற அந்த பேரணியில் மாயாவதியும், ஜெயலலிதாவும் கலந்து கொள்ளாமல் தங்கள் சார்பாக பிரதிநிதிகளை அனுப்பியிருந்தனர்.இந்நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி டில்லியில் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். டில்லி ஹுமாயூன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரகாஷ் கராத், பரதன், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

பெங்களூர் பேரணிக்கு சென்றிருந்தபோது, பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ்மிஸ்ரா அங்கு அனைத்து தலைவர்களுக்கும் இதுகுறித்த அழைப்பை விடுத்து இருந்தார்.இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படப்போகும் அம்சமே யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முடிவு செய்வதே. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, மாயாவதியை முன்னிறுத்தி இடதுசாரிகள் உள்ளிட்ட தலைவர்கள் களம் இறங்கினர். குறிப்பாக சமாஜ்வாடி கட்சியை உடைக்க வேண்டுமெனில் மாயாவதியை முன்னிருத்தினால்தான் சரியாக வரும் என்று எண்ணி அந்த சமயத்தில் மாயாவதியை தங்களது அணியின் பிரதமர் வேட்பாளர் என்று இந்தத் தலைவர்கள் அடையாளம் காட்டினர். மன்மோகன் சிங் அரசை கவிழக்க போடப்பட்ட அந்த வியூகத்தில் இடதுசாரிகளால் வெற்றி பெற முடியவில்லை. அதன்பின் காட்சிகள் மாறிக் கொண்டே வந்தபோது, மாயாவதிதான் தங்கள் அணியின் தலைவர் என்று பேசுவதற்கு கூட இந்தத் தலைவர்கள் தவிர்த்தனர். இது மாயாவதியை கோபமூட்டியதாக தெரிகிறது.

தன்னை முன்னிருத்தி செயலாற்ற துவங்கிய இவர்கள் திடீரென என்ன காரணத்திற்காக பின் வாங்குகின்றனர் என்ற அதிருப்தி அவருக்கு ஏற்பட்டது. இதனால் மூன்றாவது அணி விஷயத்தில் பட்டும் படாமலேயே இருந்து வந்தார். உ.பி.,யில் தனித்து போட்டி என்றும் அறிவித்தார். ஆனால் தேவுகவுடாவின் திடீர் முயற்சியால் மீண்டும் தற்போது மூன்றாவது அணி வடிவம் பெறத்துவங்கியுள்ளதால், தன்னை பிரதமர் வேட்பாளர் என்று வெளியிட்ட அறிவிப்பு என்னவாயிற்று என்ற கேள்வியை இந்தத் தலைவர்கள் முன்பாக வைக்க மாயாவதி விரும்புகிறார். அதன் விளைவே இன்றைய ஆலோசனைக் கூட்டம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பி.,யில் காங்கிரசும், சமாஜ்வாடியும் அடித்துக் கொள்ளும் சண்டையால் மாயாவதி அதிக இடங்களில் வெல்லப்போகிறார் என்று இந்தத் தலைவர்கள் கருதுகின்றனர்.

எனவே மாயாவதியை தவிர்த்துவிட்டு மூன்றாவது அணியை வலுப்படுத்த முடியாது என்ற எண்ணத்தில் தற்போது அணி சேர்ந்துள்ளனர். இதை மாயாவதியும் உணர்ந்துள்ளார் என்பதாலேயே இதுபோன்ற நிபந்தனையை அவர் முன்வைக்கிறார் என்று தெரிகிறது.இன்றைய கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கலந்துகொள்வாரா என்ற பரபரப்பும் கடந்த இரண்டு நாட்களாக டில்லியில் காணப்படுகிறது.

பெங்களூரில் பேரணியில் சந்தித்தபோது மைத்ரேயனிடம் வாய்மொழியாக மட்டுமே சதீஷ் மிஸ்ரா அழைப்பு விடுத்ததாகவும் முறைப்படி மாயாவதியிடம் இருந்து ஜெயலலிதாவுக்கு அழைப்பு வரவில்லை என்றும் தெரிகிறது. எனவே ஜெயலலிதாவை சந்திரபாபு நாயுடு, தேவகவுடா போன்ற பெரிய தலைவர்கள் அழைப்பு விடுத்தாலோ அல்லது மாயாவதியே நேரடியாக தன்னை அழைத்தாலோ ஜெயலலிதா கலந்து கொள்ள கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இன்றைய கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வது சந்தேகமே என்றும் அவர் சார்பில் வழக்கம்போல அனுப்பிவைக்கப்படும் மைத்ரேயன் கூட கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections